தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.11.11

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவது உறுதி-உம்மன்சாண்டி


கேரள மாநிலம் கொல்லம் கல்லூரி மைதானம் ஒன்றில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், முதல்- மந்திரி உம்மன்சாண்டி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-116 ஆண்டு கால பழமையான முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதில் கேரள அரசு உறுதியாக உள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசின் அச்சம் மத்திய அரசுக்கு
வெற்றிகரமான முறையில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டுடன் நல்லுறவு தொடர வேண்டும் என்று கேரளா விரும்புகிறது.
இந்த பிரச்சினையில் கேரள மக்கள் பொறுமை இழக்காமல் அமைதி காக்க வேண்டும். தண்ணீர் வினியோகம் தொடர்பாக உறுதி அளித்தும், புதிய அணைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பது வினோதமாக உள்ளது. தமிழக விவசாயிகள் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் பெற வேண்டியதன் முக்கியத்துவம் எங்களுக்கு புரிகிறது.
தற்போது வழங்கப்படுவதுபோல் அதே அளவு தண்ணீரே அவர்களுக்கு வழங்கப்படும். தமிழக- கேரள மாநிலங்களுக்கு இடையே இந்த அணை தொடர்பான ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு பொருந்தும் என்றாலும், அதுவரை இந்த அணை நீடிக்காது என்பது தெளிவான ஒன்றாகும்''.
 இவ்வாறு உம்மன்சாண்டி கூறினார்.
இதற்கிடையில், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள கவர்னர் பரூக் மரைக்காயர் இரு மாநிலங்களுக்கு இடையே மத்தியஸ்தம் செய்து வைக்க வேண்டும் என்று, கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கேட்டுக்கொண்டு இருக்கிறார். நேற்று கவர்னர் பரூக் மரைக்காயரை சந்தித்து பேசிய சென்னிதாலா, இந்த கோரிக்கையை அவரிடம் வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட முல்லைப்பெரியாறு அணைப்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களை இன்று பார்வையிட இருப்பதாக தெரிவித்தார். கேரள முன்னாள் முதல்- மந்திரியும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான அச்சுதானந்தன் முல்லைப் பெரியாறு அணை மற்றும் பூமி அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று பார்வையிடுகிறார்.
பல்வேறு போராட்டக்குழுவினரையும் அவர் சந்திக்கிறார். இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணும்படி வற்புறுத்தி கடந்த மூன்று நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. பிஜிமோலையும் அச்சுதானந்தன் சந்தித்துப் பேசுகிறார்.
புதிய அணை கட்டும் கோரிக்கையை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி முன்னணி சார்பில் டிசம்பர் 8-ந் தேதி அன்று, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அரபிக்கடல் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த தகவலை தெரிவித்த இடதுசாரி முன்னணி அமைப்பாளர் வைக்கம் விஸ்வன், முல்லைப்பெரியாறு அணையின் நீர்த்தேக்க அளவை 120 அடியாக குறைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, முல்லை பெரியாறு அணைக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அதை சந்திக்க கடற்படை தயார்நிலையில் இருப்பதாக கடற்படை துணை அட்மிரல் கே.என்.சுசில் கூறினார். ஐ.என்.எஸ். திர் கப்பலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முல்லை பெரியாறு அணைக்கு அசம்பாவிதம் ஏற்படுமா? அது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எங்களால் யூகிக்க முடியாது. இருப்பினும், முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்போம். மக்களுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உதவி அளிப்போம். அவர்களுக்கு எல்லாவகையான உதவியும் அளிக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி, இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்த ஒரு வக்கீல், கேரள ஐகோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். அம்மனு, தற்காலிக தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லுர், நீதிபதி ராமச்சந்திர மேனன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
முல்லை பெரியாறு அணையால் பொதுமக்களின் உயிருக்கு ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்துகளை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று (புதன்கிழமை) அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 கருத்துகள்: