குஜராத்தில் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் தொடங்கியுள்ள நரேந்திர மோடியின் நடவடிக்கை மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
மோடியின் உண்ணாவிரதம் அவர் செய்த குற்றங்களைக் குறைத்து விடாது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷித் ஆல்வி சனிக்கிழமை தெரிவித்தார்.
மோடி உண்ணாவிரதத்தின் தேவையை உணர்ந்துள்ளார். இது குஜராத்தில் அவர் செய்துள்ளக் குற்றங்களை அவரே உணர்ந்துள்ளதைக் காட்டுகிறது.
உண்ணாவிரதம் ஒருவரின் குணாதிசயங்களை மாற்றிவிடாது. அவரின் குற்றங்களையும் குறைத்துவிடாது என்று ஆல்வி தெரிவித்தார்.
சமாஜ்வாதி கட்சி: இது பா.ஜ.க.வுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டி என்று சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரதம் இருக்க மோடிக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. மோடி எந்த ஒரு அரசநீதியையும் கடைபிடிக்க வில்லை.
முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியாவின் மனைவி உள்பட, எத்தனையோ பெண்கள் நீதி வேண்டிப் போராடி வருகிறார்கள். பிரதமர் வேட்பாளராக தன்னை மீண்டும் முன் நிறுத்தும் அத்வானியின் முயற்சியை முறியடிக்கும் நடவடிக்கையே மோடியின் உண்ணாவிரதம். இது அக்கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியே ஆகும் என்று மோகன் சிங் தெரிவித்தார்.
ஐக்கிய ஜனதா தளம்: மோடியின் உண்ணாவிரதத்துக்கு அளிக்கப்படும் விளம்பரத்தை ஜக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் குறை கூறியுள்ளார். 70 முதல் 80 சதவீத மக்கள் தினமும் ரூ.20 மட்டுமே கொண்டு வாழ்கிறார்கள். 80 சதவீத மக்கள் தினமும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தினமும் அரை நாளோ அல்லது முழு நாளோ உண்ண முடியாமல் உள்ளனர். இவர்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால் தனிநபரின் உண்ணாவிரதங்கள் விவாதிக்கப்படுகின்றன என்று சரத் யாதவ் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக