முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்காக மாதிரி திட்டம் வகுக்கப்படும் என்று, மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்சித் கூறியுள்ளார்.
மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்சித் ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆந்திர அரசு பாணியில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டுக்காக மாதிரி திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் எனது அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.
அரசு அறிவிக்கை மூலமாக இந்த மாதிரி திட்டம் வெளியிடப்படும். இதுதொடர்பான சட்டத்திலும் தேவையான திருத்தங்களை செய்வோம். முஸ்லிம் இட ஒதுக்கீட்டுக்காக இன்னொரு மசோதா கொண்டு வருவது அவசியமா அல்லது அதுபற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. அதுபற்றி ஆய்வு செய்து வருகிறோம். முஸ்லிம்களுக்கு எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்று ஆய்வு செய்து முடிவு எடுப்பதில் இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக