அகமதாபாத்: குஜராத் மாநிலம் கோத்ராவில் மர்மக்கும்பல் ஒன்று ரயில் பெட்டி ஒன்றை எரித்ததன் விளைவாக அதில் பாபர் மசூதியை இடிப்பதற்காக பயணம் செய்த கரசேவகர்கள் மற்றும் பொதுமக்கள் கருகி சாம்பலானார்கள். இதனை தொடர்ந்து அம்மாநிலம் முழுவதும் முஸ்லிம்கள் மீது இந்துத்துவாவினர் தாக்குதல் நடத்தினர்.
மேலும் அவர்களின் வீடுகள் சொத்துக்கள் உடமைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டும் குழந்தைகள் முதியவர்கள் எனப் பலரும் வெட்டிக்கொல்லப்பட்டனர் 3000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இந்துத்துவாவினரால் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களுக்கு எதிரான இக்கலவரத்தில் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டவர்களில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரியும் ஒருவராவார். கணவனை இழந்த இவரது மனைவி ஜகியா ஜாப்ரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் அவர், குஜராத் மாநில முதல்- மந்திரி நரேந்திரமோடி, மாநில மக்களையும், உடமைகளையும் பாதுகாக்க தவறிவிட்டார். அதோடு மாநிலத்தில் நடந்துள்ள இனக்கலவரத்துக்கு துணை போய் உள்ளார். இது தொடர்பாக மோடி உள்பட 72 பேரிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதையடுத்து முன்னாள் சிபிஐ இயக்குனர் ராகவன் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி 600 பக்க அறிக்கை தயார் செய்தனர். கடந்த பிப்ரவரி மாதம் அந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த அறிக்கையை ஆய்வு செய்து பரிந்துரைகள் தருமாறு ராஜு ராமச்சந்திரன் என்பவரை உச்ச நீதிமன்றம் நியமித்தது. ராஜு ராமச்சந்திரன் விசாரணை நடத்தி சிறப்பு விசாரணை குழு தகவல்களை தள்ளுபடி செய்தார். மேலும் சில நடவடிக்கைகளுக்கும் பரிந்துரைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே சில காவல்துறை அதிகாரிகளும் நரேந்திரமோடிக்கு எதிராக கருத்து வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்கள். இந்த நிலையில் மோடிக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், பி. சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகியோரை கொண்ட அமர்வு கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு விவரம் வருமாறு:- 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளில் இனிமேலும் எந்த கண்காணிப்பும் தேவை இல்லை. கலவரத்தை ஒடுக்க நரேந்திரமோடி எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக மோடி மீது எந்த தீர்ப்பும் சொல்லப்பட வேண்டியது இல்லை. இஷான் ஜாப்ரி கொலை வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு தனது இறுதி அறிக்கையை மாஜிஸ்திரேட் கீழ்க்கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை ஆய்வு செய்து, நரேந்திரமோடி மற்றும் 63 பேர் மீது கலவர வழக்குகளை தொடர்ந்து நடத்துவதா? வேண்டாமா? என்பதை மாஜிஸ்திரேட் முடிவு செய்யலாம்.
மோடிக்கு எதிரான வழக்கை முடித்து கொள்ள மாஜிஸ்திரேட் நினைத்தால் இசன் ஜப்ரியின் விதவை மனைவியை அழைத்து அவர் கருத்தை கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக