தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.7.11

பட்டபகலில் இளைஞரை கல்லால் தாக்கி கொன்ற நண்பர்கள் கைது

கோவை, ஜூலை. 13-   சிக்னலில் நின்றிருந்த நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் முன்னிலையில், வாலிபரை கல்லால் தாக் கொன்ற கி நண்பர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகர போலீஸ் சார்பில் சாலை சந்திப்புகளில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு தொடர்ந்து, அபராதம் வசூலிக்க, நகரின் முக்கிய ரோடுகளில் அமைந்துள்ள சிக்னல்களில், 186 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மட்டுமல்லாது, குற்றச் செயலில் ஈடுபடுபவர்களையும் பிடிக்க, கூடுதலாக சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, போலீஸ் கமிசனர் அமரேஷ் பூசாரி உத்தரவிட்டுள்ளார். கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் அனைத்தையும் கமிசனர் அலுவலக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து, நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

நேற்று முன்தினம் பகல் 1.30 மணிக்கு கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் திரையில் அக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சாயிபாபாகாலனி, கே.கே.புதூரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(29). தனது நண்பர்கள் கண்ணப்பபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(26), மதுரை, பாலமேடு பகுதியைச் சேர்ந்த முருகன்(21), ரத்தினபுரியைச் சேர்ந்த கிருஷ்ணன்(28) மற்றும் சாயிபாபாகோவில், ஹோஸ்மின் நகரைச் சேர்ந்த கணேசன்(31) ஆகியோருடன் மது குடிக்க சாயிபாபாகாலனி போலீஸ் ஸ்டேசன் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றார். போதை தலைக்கு ஏறியதும், சந்தோஷ்குமாருக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கிருஷ்ணன் தாக்கப்பட்டார். அங்கிருந்தவர்கள் தகராறு செய்தவர்களை சமாதானப்படுத்தினர். இதில் சந்தோஷ்குமார், நண்பருடன் வெளியேறினார். சாயிபாபாகாலனி போலீஸ் ஸ்டேசன் சிக்னல் அருகே இருவரும் நின்று கொண்டு மீண்டும் மதுக்கடைக்கு செல்ல வேண்டும் என தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது, டூ வீலரில் வேகமாக வந்த முருகனும், ராமச்சந்திரனும், ரோட்டோரம் பேசிக் கொண்டிருந்த சந்தோஷ்குமார் உள்ளிட்ட இருவர் மீதும் மோதினர். இதில், நின்றிருந்தவர்கள் மட்டுமல்லாது, டூ வீலரில் வந்தவர்களும் கீழே விழுந்தனர். இதற்குள் கிருஷ்ணனும் அங்கு வந்து, சந்தோஷ்குமாரை சரமாரியாக தாக்கினார்.
போதையில் தடுமாறி விழுந்தவரை, அருகில் கிடந்த கல்லால் நண்பர்கள் நால்வரும் சரமாரியாக தாக்கினர். இதில் சந்தோஷ்குமாரின் தலை, மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இத்தனைக்கும், தாக்குதல் நடந்த இடம் சிக்னல் பகுதி. மூன்று நிமிட நேரம் நடந்த கொடூர சம்பவத்தை சிக்னலில் காத்திருந்த நூற்றுக் கணக்கான வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் எழவில்லை. இதற்குள்ளாக அந்த இடத்திலிருந்து, தாக்குதல் நடத்திய நான்கு பேரும் சிக்னலுக்காக நின்றிருந்த வாகன கூட்டத்துக்குள் புகுந்து தப்பினர். 20 அடி தூரத்தில் போலீஸ் ஸ்டேசன் இருந்தும் நடந்த சம்பவத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதேபோல், சிக்னலில் எப்போதும் நின்றிருக்கும் டிராபிக் போலீஸ்காரரும் சம்பவத்தின்போது அங்கு இல்லை. மூன்று நிமிடத்துக்கு பிறகே, அவரும் அப்பகுதிக்கு வந்து சேர்ந்து, யாருக்கோ மொபைலில் தகவல் தெரிவிக்கிறார். இதன்பிறகே, போலீசார் சந்தோஷ்குமாரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சிக்னலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. இதைத்தான் கட்டுபாட்டு அறையில் இருந்த போலீசாரும், தகவல் அறிந்து போலீஸ் கமிசனரும் பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். சாயிபாபாகாலனி போலீசாரை தொடர்பு கொண்ட கமிசனர், கேமராவில் கண்ட காட்சியைக் கூறி, தாக்குதல் நடத்திய நான்கு பேரை கைது செய்ய உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் சீனிவாசலு தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் நடத்தி ஒரு மணி நேரத்தில், நண்பனை கல்லால் தாக்கி கொல்ல முயன்ற பாசக்கார நண்பர்களை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் கமிசனர் அமரேஷ் பூசாரி கூறுகையில், கண்காணிப்பு கேமரா போக்குவரத்து விதி மீறலை மட்டுமன்றி, இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை துல்லியமாக கண்டுபிடிக்கவும் உதவுகிறது. சம்பவத்தில் குற்றவாளிகள் யார் என தெளிவாக தெரிவதால், தண்டனை உறுதியாக கிடைக்கும் என்றார்.

0 கருத்துகள்: