தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.5.11

பின்லேடன் கொல்லப்பட்டது பற்றி மன்மோகன்சிங் கருத்து


புதுடெல்லி, தீவிரவாத இயக்கங்களின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அரசு முடிவு கட்ட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டு உள்ளார்.
பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
தீவிரவாதத்துக்கு எதிரான ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும். இதை நான் வரவேற்கிறேன். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அல்-கொய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
நாகரீக சமுதாயத்துக்கும், பெண்கள், குழந்தைகள் போன்ற அப்பாவி மக்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தீவிரவாத செயல்களுக்கு முடிவு கட்ட சர்வதேச சமுதாயம் குறிப்பாக பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மன்மோகன்சிங் கூறி உள்ளார்.
உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ஓர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டு இருப்பதன் மூலம் அந்த நாடு பல்வேறு தீவிரவாத குழுக்களுக்கு புகலிடமாக விளங்குவதாக தெரிய வந்து இருப்பதாகவும், இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என்றும் கூறி உள்ளார்.
மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் பாகிஸ்தானில் இருப்பதாகவும், இந்தியா அவர்களின் பெயர் பட்டியலை கொடுத்து இருப்பதாகவும் அதன் அடிப்படையில் அந்த நபர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் அவர் கூறி உள்ளார்.
வெளியுறவு மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில்: அமெரிக்க படையினரால் பின்லேடன் கொல்லப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் என்றும், உலக அளவில் மேற்கொள்ளப்படும் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் வெற்றிகரமான மைல் கல் என்றும் கூறி உள்ளார்.
தீவிரவாத குழுக்களால் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும், தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவத்தையும், மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தையும் சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மணிஷ் திவாரி: தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இரு மாறுபட்ட அளவுகோல்கள் கூடாது என்று தெரிவித்தார்.
பின்லேடன் கொல்லப்பட்டதன் மூலம் உலகில் ஒரு தீவிரவாதி குறைந்து இருப்பதாகவும் அவரது இயக்கம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்றும் இந்திய விமானப்படையின் தளபதி பி.வி.நாயக் கூறி உள்ளார்.

0 கருத்துகள்: