தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.2.11

வெளியேற மறுக்கிறார் அதிபர் முபாரக்: தொடர்கிறது போராட்டம்

கெய்ரோ :எகிப்து அதிபர் முபாரக்கை உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று மீண்டும் லட்சக்கணக்கானோர் தாரிர் சதுக்கத்தில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், தற்போதைய துணை அதிபர் ஒமர் சுலைமானை அதிபராக்குவது குறித்து, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆலோசனை நடத்தினார்.மேலும் படிக்க தலைப்பை கிலிக் செய்யவும்.


எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக், வெள்ளிக்கிழமைக்குள் (நேற்று) பதவி விலக, எதிர்க்கட்சிகள் மற்றும் ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம் கூட்டணி ஏற்கனவே கெடு விதித்திருந்தது. வெள்ளியன்று மீண்டும் மாபெரும் பேரணி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.அதன்படி, நேற்று தாரிர் சதுக்கத்தில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். அதிபர் ஆதரவாளர் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையில் இரு நாட்களாக கடும் மோதல் நடந்து வந்ததால், நேற்று தாரிர் சதுக்கத்தைச் சுற்றிலும் ராணுவப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சதுக்கத்திற்குள் நுழைவதற்கு முன், பல முறை மக்கள் சோதனையிடப்பட்டனர்.


நேற்று நண்பகலுக்குள் அங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டுவிட்டனர். நேற்றைய கூட்டம் அமைதியாகவே துவங்கியது. நண்பகலில் தொழுகை நடந்தது.எனினும், அதிபர் ஆதரவாளர்கள் மீண்டும் மோதலில் ஈடுபட்டால், அவர்களை தாக்குவதற்குத் தேவையான கற்கள், கழிகள் எல்லாம் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. வானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் வட்டமடித்தன. அலக்சாண்டிரியா மற்றும் மன்சூரா நகர்களிலும் நேற்று லட்சக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாதுகாப்பு அமைச்சர் வருகை:தாரிர் சதுக்கத்தின் நிலைமையைப் பார்வையிட, பாதுகாப்பு அமைச்சர் பீல்டு மார்ஷல் முகமது டன்டாவி நேற்று நண்பகலில் அங்கு சென்றார். அப்போது, அவர் மீது தாக்குதல் எதுவும் நிகழாமல் இருக்க பொதுமக்களே அவருக்கு பாதுகாப்பளித்தனர்.இந்நிலையில், இரு நாட்களாக நடந்த வன்முறைக்கு மன்னிப்பு கேட்பதாக அறிவித்த பிரதமர் அகமது சபீக், வன்முறை குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

துணை அதிபர் விமர்சனம்:நேற்று முன்தினம் அரசு, "டிவி'யில் பேசிய துணை அதிபர் ஒமர் சுலைமான், "வன்முறையின் பின்னணியில் சில வெளிநாட்டு சக்திகள், முஸ்லிம் சகோதரத்துவ கட்சி மற்றும் தொழிலதிபர்கள் சிலர் இருந்திருக்கலாம். இந்தப் போராட்டத்தை சில அன்னிய சக்திகள் தூண்டி விடுகின்றன' என்று தெரிவித்தார். அவரது கருத்துக்கு, அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை:கடந்த இரு நாட்களாக, எகிப்தில் பத்திரிகையாளர்கள் மீது அரசு கடும் அடக்குமுறையை ஏவி வருகிறது. சி.என்.என்., ஏ.பி.சி., மற்றும் அல்ஜசீரா போன்ற செய்தி நிறுவனங்களின் நிருபர்கள், வன்முறையாளர்களால் தாக்கப்பட்டனர்; பல நிருபர்கள் கடுமையாக அடித்து உதைக்கப்பட்டனர். வன்முறைச் சம்பவங்களைப் படம் பிடித்துக் கொண்டிருந்த நான்கு இஸ்ரேல் நிருபர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.பத்திரிகையாளர்கள் தவிர, மனித உரிமை ஆர்வலர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தியா, அமெரிக்கா கண்டனம்: பத்திரிகையாளர்கள் மீது வன்முறையை நிகழ்த்தியவர்கள், அதிபர் முபாரக்கின் ஆதரவாளர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எகிப்து அரசின் இந்த அடக்குமுறைக்கு, சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து நேற்று அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவுலி விடுத்த அறிக்கையில், "பத்திரிகையாளர்கள் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட்டது. யார் நடத்தினர் என்பதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. இருந்தாலும் அந்த விவரத்தை இப்போது வெளியிடப் போவதில்லை. பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டது, சில பத்திரிகை அலுவலகங்கள் தீ வைக்கப்பட்டது, பத்திரிகையாளர்களின் கார்கள் தாக்கப்பட்டது போன்றவை எதேச்சையாக நடந்தவை அல்ல' என்று தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா விடுத்துள்ள அறிக்கையில், "எகிப்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன். இது போன்ற சம்பவங்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் விடுத்துள்ள அறிக்கையில், "இது போன்ற சம்பவங்கள் அத்துமீறியவை. அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. பேச்சு சுதந்திரமும், கூட்டம் போடும் சுதந்திரமும் முற்றிலும் அங்கீகரிக்கப்பட வேண்டியவை' என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.தற்போது கெய்ரோவில் 3,000க்கும் மேற்பட்டவெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முபாரக் பேட்டி: இதற்கிடையில் நேற்று முன்தினம் அமெரிக்க செய்தி நிறுவனமான "ஏ.பி.சி.,'க்கு அதிபர் முபாரக் அளித்த பேட்டியில், "நான் கடந்த 62 ஆண்டுகளாக இந்நாட்டிற்கு சேவை செய்து விட்டேன்; போதும் என்று தோன்றிவிட்டது. நான் பதவி விலக விரும்புகிறேன். ஆனால், நான் பதவி விலகினால் ஏற்படும் கலவரங்களை நினைத்தால் தான் அச்சமாக இருக்கிறது. போராட்டத்தில் நடந்த கலவரத்திற்கு அரசு பொறுப்பேற்க முடியாது. எகிப்தியர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதைப் பார்க்க நான் விரும்பவில்லை' என்று தெரிவித்தார்.

அமெரிக்கா ஆலோசனை:இந்நிலையில், அதிபர் முபாரக்கை பதவியில் இருந்து விலக்கி விட்டு, துணை அதிபரான ஒமர் சுலைமானை ராணுவத்தின் அதிபராக்குவதற்காக, எகிப்து அதிகாரிகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்தியர்கள் பத்திரம்:எகிப்தில் உள்ள 3,600 இந்தியர்கள் பத்திரமாக இருப்பதாக அங்குள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியர்களுக்கு உதவி செய்வதற்காக கடந்த ஜனவரி 28ம் தேதி முதல் அங்கு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை ஒன்று இயங்கி வருகிறது. தவிரவும், செய்தி சேகரிக்கும் இந்தியப் பத்திரிகையாளர் மீதான கெடுபிடியும் குறைந்தது.அதேநேரம், ரஷ்யாவைச் சேர்ந்த 33 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் எகிப்தில் மாட்டிக் கொண்டுள்ளனர். இதுவரை 2,000 பேர் மட்டுமே நாடு திரும்பியுள்ளனர்.

முபாரக்கின் 7,000 கோடி டாலர் சொத்து :எகிப்து அதிபர் முபாரக் மற்றும் அவரது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு, 4,000 கோடி டாலரில் இருந்து 7,000 கோடி டாலருக்கு அதாவது 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கலாம் என, "ஐ.எச்.எஸ்., குளோபல் இன்சைட்' என்ற பொருளாதார ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.முபாரக், அவரது மனைவி, இரு மகன்கள் ஆகியோர், வெளிநாட்டு தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்து மிகப் பெருமளவு பணத்தை ஈட்டியுள்ளனர். லண்டன், பாரிஸ், மாட்ரிட், துபாய், வாஷிங்டன், நியூயார்க் மற்றும் பிராங்க்பர்ட் ஆகிய நகரங்களில் இவர்களின் சொத்துகள் கணக்கில்லாமல் குவிந்து கிடக்கின்றன.

அமெரிக்கத் தூதரகத்தின் அட்டூழியம்?கடந்த மாதம் 28ம் தேதி வெள்ளிக் கிழமை அன்று தான் முதன் முதலாக லட்சக்கணக்கான மக்கள் எகிப்தின் தாரிர் சதுக்கத்தில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அமெரிக்க தூதரக கார் ஒன்று, திடீரென புறப்பட்டு, அங்கு சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிக் கொன்று விட்டு புயல் வேகத்தில் சென்று விட்டது.இதுபற்றிய வீடியோ ஒன்று "யூ டியூப்' பில் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் 20 பேர் வரை பலியாகியிருக்கலாம். அந்தக் காருக்குள் இஸ்ரேலின் உளவுத் துறையான "மொசாட்' டைச் சேர்ந்த சிலர் இருந்தனர் என்றும் கூறப்படுகிறது. ஆயினும் இது குறித்து செய்திகள் எதுவும் வெளிவரவில்லை.
நன்றி : தினமலர்

0 கருத்துகள்: