தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.2.11

எகிப்து:அரசியல் சட்டத்தை திருத்தம் செய்ய ஓய்வுப்பெற்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைப்பு

கெய்ரோ,பிப்.16:அரசியல் சட்டத்தை திருத்துவதுத் தொடர்பாக ஆய்வுச்செய்து நெறிமுறைக் கட்டளைகளை வழங்குவதற்காக ஓய்வுப்பெற்ற நீதிபதி தாரிக் அல் பிஷ்ரியை எகிப்து ராணுவ சுப்ரீம் கவுன்சில் நியமித்துள்ளது.

ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியில் சுதந்திர நீதிபீடத்திற்காக தீவிரமாக குரல் கொடுத்தவர் பிஷ்ரி. அரசியல் சட்ட திருத்தக் குழுவின் தலைவராக ராணுவ சுப்ரீம் கவுன்சில் தன்னை நியமித்திருப்பதாக அல் பிஷ்ரி தெரிவித்தார்
.
10 தினங்களுக்குள் அரசியல் சட்டம் திருத்தி எழுதப்படும் என ஹுஸ்னி முபாரக்கிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவ சுப்ரீம் கவுன்சில் அறிவித்திருந்தது.

இரண்டு மாதத்திற்குள் அரசியல் சட்ட திருத்தம் குறித்து மக்கள் விருப்ப வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தது. தற்போதைய அரசியல் சட்டம் நேற்று முன்தினம் முடக்கப்பட்டிருந்தது. தங்களின் வாக்குறுதியை பேணுவோம் என நேற்றும் ராணுவ சுப்ரீம் கவுன்சில் மீண்டும் தெரிவித்திருந்தது.

மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய கண்டறியப்பட்ட உள்துறை அமைச்சகத்தின் பொதுமக்கள் பாதுகாப்பிற்கான இயக்குநர் அத்லி ஃபயாத், கெய்ரோ பாதுகாப்பு தலைவர் இஸ்மாயீல் அல் ஷஹீர் ஆகியோரை ராணுவம் வெளியேற்றியுள்ளது.

மக்கள் வாழ்க்கை மீண்டும் சுமூகமான சூழலுக்கு திரும்பிய வேளையிலும் சில இடங்களில் நிச்சயமற்ற நிலைமை நிலவுவதாக அல்ஜஸீரா கூறுகிறது.

இன்று முதல் பங்குச்சந்தை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ராணுவம் மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.

முபாரக்கினால் நியமிக்கப்பட்டவர்களை வெளியேற்றிவிட்டு அமைச்சரவையை புனர் நிர்மாணிக்க வெளிநாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் அஹ்மத் ஷபீக் பேச்சுவார்த்தை நடத்தினார்.

முபாரக், அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் நடத்திய ஊழலால் எகிப்தின் பொருளாதார நிலைமை சீர்குலைந்துள்ளது. இதனால் அதனை மேம்படுத்த வெளிநாட்டு உதவியை ராணுவம் கோரியுள்ளது. இதன் முதல் கட்டமாக முபாரக்குடன் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு அமெரிக்கா,பிரிட்டன், பிரான்சு, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளிடம் ராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், சொத்துக்களை முடக்குவதற்கான பட்டியலில் முபாரக் இல்லை என அமெரிக்காவும், பிரான்சும் அறிவித்துள்ளன.

அதேவேளையில், ஷரமுல் ஷேக்கில் தங்கியுள்ள ஹுஸ்னி முபாரக்கிற்கு பிறருடைய உதவியின்றி நடக்கக்கூட இயலாது என உள்ளூர் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: