தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.2.11

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி விடுதலையை எதிர்த்து சி.பி.ஐ. மனு


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது.
1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையொட்டி சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தினார்கள். பாபர் மசூதியை இடித்த திரளான கரசேவகர்கள் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்படும் போது மேடையில் இருந்து பார்வையிட்ட பா.ஜனதா, சிவசேனா, விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங்தளம், ராஷ்டிரீய சுயம் சேவக் மற்றும்
சங்பரிவார் தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோசி, கிரிராஜ் கிஷோர், வினய் கத்தியார், சாத்வி ரிதம்பரா, உமாபாரதி, பால் தாக்கரே, அசோக் சிங்கால், பிரவீன் தொகாடியா உள்பட 21 தலைவர்கள் மீது கிரிமினல் சதி வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை சி.பி.ஐ. தனி நீதிமன்ற நீதிபதி அலோக் சிங் விசாரித்து, அத்வானி உள்பட 21 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்தது. இந்த தீர்ப்பு கடந்த 2001-ம் ஆண்டு மே 4-ந் தேதி அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து லக்னோ உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மறுபரிசீலனை மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. சார்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவில், சி.பி.ஐ. தாக்கல் செய்த ஆதாரங்களை கீழ் நீதிமன்றங்கள் சரியாக கவனத்தில் கொள்ளவில்லை. எனவே அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீதான கிரிமினல் சதி என்ற குற்றச்சாட்டு சரியாக விசாரிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்: