பாகிஸ்தானுக்கு உரிய மதிப்பை அளித்தால்தான் அமெரிக்காவுடனான உறவு வலுவடையும் என்று அமெரிக்காவிடம் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.அமெரிக்கா வின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தாமஸ் நிடெஸ், பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரியை, வியாழக்கி ழமை லாகூரில் சந்தித்துப் பேசினார். அப்போது பாகி ஸ்தான் தரப்பிலான கருத்துகளை ஜர்தாரி முன்வை த்தார்.பயங்கரவாதிகளை ஒழிக்கிறேன் என்கிற பெயரில் பாகிஸ்தானில் பழங்குடியின
மக்கள் வசிக்கும் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்படும் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் பலர்உயிரிழந்துள்ளனர்.
இது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும். இது பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரானது. இதுபோல சொந்த மக்களைக் காப்பதற்குப் பதில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் விமானங்களுக்கு விமான தளத்தில் அனுமதி அளிப்பது மற்றும் உள்ளிட்ட செயல்கள் உள்ளூர் மக்களிடையே அரசின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும். அனைத்துக்கும் மேலாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் நேட்டோ படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரிக்க நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அளிக்கும் அறிக்கையை முழுமையாக விவாதித்த பிறகே நேட்டோ படைகளுக்கு பாகிஸ்தான் வழியாக பாதையைத் திறந்து விடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று ஜர்தாரி கூறினார். இந்த முடிவானது முழுக்க முழுக்க பாகிஸ்தான் மக்களின் நலன் சார்ந்த விஷயமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தான், அமெரிக்கா இடையிலான உறவானது பரஸ்பரம் மதிப்பளிக்கக் கூடியதாகவும், பரஸ்பரம் பலனளிப்பதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இரு தலைவர்களும் ஆப்கனில் நிலவும் சூழல் குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது. போதைப் பொருள் கடத்தல், தீவிரவாத குழுக்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட விஷயங்கள் இப்பிராந்தியத்தில் மிகப் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இவ்விரண்டு விஷயங்களும் உடனடியாகக் கவனிக்கப்படவேண்டியவை என்றும் தாமஸ் நிடெஸிடம் ஜர்தாரி குறிப்பிட்டார்.
நேட்டோ படைகள் இந்த விஷயத்தை தீவிரமாகக் கண்காணித்து எல்லையில் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் அதேநேரத்தில், தீவிரவாதக் குழுக்களுக்கு நிதி உதவி கிடைப்படையும் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றார். ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு அந்நாட்டில் பன்னாட்டு முதலீடுகளை அதிகரிக்க ஒரு விரிவான செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்று ஜர்தாரி வலியுறுத்தினார். பயங்கரவாதிகளை ஒழிப்பதில் பாகிஸ்தான் அரசு சிறப்பாகச் செயல்படுவதாக ஜர்தாரியிடம் நிடெஸ் குறிப்பிட்டார். பஞ்சாப் மாகாண அரசு புறக்கணிப்பு: நான்கு நாள் பயணமாக பஞ்சாப் மாகாணத்துக்கு புதன்கிழமை வந்த அதிபர் ஜர்தாரியை, அம்மாகாண அமைச்சர்கள், அதிகாரிகள் எவரும் சென்று வரவேற்கவில்லை. பஞ்சாப் மாகாணத்தில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (பிஎம்எல்-என்) ஆட்சியில் உள்ளது.
ஒருவார கால புறக்கணிப்பு நடவடிக்கையை இம்மாகாண அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அனைத்து அரசுப் பணிகளும் இங்கு முடங்கியுள்ளன.
லாகூரிலிருந்து இம்மாதம் 8-ம் தேதி இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளார் ஜர்தாரி. தனிப்பட்ட முறையில் இந்தியா வரும் ஜர்தாரி, ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் உள்ள க்வாஜா மொய்னுதீன் தர்காவுக்கு நேர்த்திக் கடன் செலுத்தச் செல்கிறார். இதனிடையே புது தில்லியில் அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் அதிகரித்துவரும் மின் வெட்டு, பெட்ரோலிய பொருள் விலையேற்றம் ஆகியவற்றைக் கண்டித்து மாகாண அரசு போராட்டம் நடத்தி வருகிறது. இதனால்தான் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவரான அதிபர் ஜர்தாரியை வரவேற்க எவரும் விமான நிலையம் செல்லவில்லை என்று பிஎம்எல்-என் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முஷாஹிதுல்லா கான் தெரிவித்தார்.
இப்போது பிஎம்எல்-என் கட்சியின் தலைர் நவாஸ் ஷெரீப், இப்போதுதான் துபையிலிருந்து லாகூர் திரும்பியுள்ளார். மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீப் இப்போது லண்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
எனவே இவர்கள் எவரும் அதிபர் ஜர்தாரியை சந்திக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக