தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.4.12

நான் எந்த குற்றமும் செய்யவில்லை: நீதிமன்றத்தில் அழுத 77 பேரை கொன்ற கொலையாளி


ஒஸ்லோ: நோர்வேயைச் சேர்ந்த அன்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் படுகொலை வழக்கு விசாரணை இன்று (16.04.2012) காலை இடம்பெற்றது. 77 நோர்வேஜியப் பொதுமக்களைப் படுகொலை செய்த ப்ரீவிக், மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல என்பது அண்மையில் மருத்துவப் பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டிருந்தது.தீவிர வலதுசாரியான ப்ரீவிக், கடந்த வருடம் ஜூலை மாதம் கார் வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் 8 பேரையும், தொடர் துப்பாக்கிப் பிரயோகம் மூலம் 69 பேரையும்
படுகொலைசெய்த சம்பவம் முழு உலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

ப்ரீவிக்கின் பயங்கரவாதச் செயற்பாட்டின் விளைவாக, அவருக்கு 21 வருடகால சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

33 வயது ப்ரீவிக் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று முன்னைய மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. என்றபோதிலும், அவருக்கு அத்தகைய உளவியல் சிக்கல்கள் எவையும் இல்லை என அண்மையில் வெளியான மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் மூலம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது குற்றத்துக்கான தண்டனைக் காலம் மேலும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிர வலதுசாரியான ப்ரீவிக், பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடுமுன் சுயசரிதை பாணியிலான 1500 பக்கக் கட்டுரையொன்றை இணையத்தில் பதிவேற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

"உலகிலேயே தூய்மையான ஆரிய இனம்" பற்றிப் பேசிய ஹிட்லரைப் போல, கலாசாரப் பன்மைத்துவத்தை மிகத் தீவிரமாக எதிர்க்கும் ப்ரீவிக், பிற தேசங்களில் இருந்து ஐரோப்பாவுக்கு வந்து குடியுரிமை பெற்றுவாழும் புதிய குடியேற்றவாசிகளால் ஐரோப்பிய கலாசாரத் தனித்துவம் சீர்குலைகிறது என்ற தீவிரக் கருத்தை உடையவர்.

"முஸ்லிம்கள் ஐரோப்பாவை ஆக்கிரமிப்பதையும், நோர்வேயின் கலாசாரத் தனித்துவம் பாதிக்கப்படுவதையும் அனுமதிக்கும் தேசத் துரோகிகளையே நான் கொலைசெய்தேன். எனவே, என்னுடைய செயலையிட்டு நான் சிறிதும் வருந்தவில்லை. நடந்த சம்பவம் குரூரமானதாக இருக்கலாம்; ஆனால், அது மிக அவசியமானதுதான்" என்று தெரிவித்துள்ள ப்ரீவிக்கின் கருத்துக்கள் அதிர்ச்சியளிப்பனவாக உள்ளன.

நீதிமன்ற விசாரணையின் போது, "இந்நீதிமன்றம் இந்த நாட்டில் கலாசாரப் பன்மைத்துவத்தை ஆதரிக்கும் சக்திகளின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதால், என்னுடைய வழக்கை விசாரிக்க அது பொருத்தமுடைய அதிகார அமைப்பு என நான் கருதவில்லை. ஓர் இராணுவ நீதிமன்றத்தில் என்னுடைய வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்" என ப்ரீவிக் தெரிவித்தார்.

77 உயிர்களைப் பலியெடுத்தும் அதுகுறித்து சிறிதும் குற்ற உணர்ச்சியற்ற இவரது இந்தத் தீவிரவாத மனோபாவம் சமூக அமைதிக்குப் பெரும் பங்கம் விளைவிக்கக் கூடியது என்பதால், ப்ரீவிக்கின் தண்டனைக்காலம் 21 வருடத்தை விட அதிகரிக்கப்படலாம். மாறாக, அவர் மனநலம் குன்றியவர்தான் என்று மீண்டும் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் தன் வாழ்நாள் முழுவதும் மனநலக் காப்பகத்தில் இருக்குமாறு பணிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 கருத்துகள்: