தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.9.11

ராஜீவ் கொலை வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றவேண்டும்; உச்ச நீதிமன்றம் உத்தரவு.


ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இதுதொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் அனுப்பப்படும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ராஜீவ் கொலை வழக்கில்
தங்களது தூக்கு தண்டனைக்கு எதிராக பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மூவரையும் தூக்கிலிட இடைக்கால தடை விதித்தது. இதுபற்றி பதிலளிக்க அரசுக்கும் உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக, ஜி.கே. மூப்பனார் பேரவை என்ற அமைப்பின் தலைவர் எல்.கே. வெங்கட் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ‘ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான வழக்கில் ஸ்ரீஹரன் என்ற முருகன்,  டி.சுந்தரராஜா என்ற சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. அவர்களது கருணை மனுக்களை ஜனாதிபதியும் நிராகரித்துவிட்டார்.
அம்மூவருக்கும் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், அவர்களது தூக்கு தண்டனையை மறு பரிசீலனை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாளில் நீதிமன்ற வளாகத்தில் சுமார் 5,000 பேர் கூடி, கொலையாளிகளுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இந்தச் செயல், நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறாக அமைந்தது.
ராஜீவ் கொலையாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது கால தாமதம் ஆவதால், மரண தண்டனையைக் கைவிட வேண்டும் என்று தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள அரசும் வலியுறுத்தி வருகிறது. இதே நிலைப்பாட்டை முந்தைய அரசில் இருந்தவர்களும் கொண்டுள்ளனர். இதனை பத்திரிகைகளும் தனியார் தொலைக்காட்சிகளும் வெளியிட்டு வருகின்றன.
தமிழக அரசின் இந்தச் செயல்பாடு நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்தக் கூடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இதேபோல், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் மரண தண்டனைக் கைதிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றன.
இத்தகைய சூழலில் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரும் வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரிப்பதற்கு இடையூறு நேரக்கூடும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, மூவரது மனு மீதான விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கோ அல்லது உச்ச நீதிமன்றத்துக்கோ மாற்ற வேண்டும்,’ என்று அந்த மனு மூலம் கோரப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் ஹெச்.எல். டாத்து ஆகியோ அடங்கிய பெஞ்ச், இம்மனு தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

0 கருத்துகள்: