3 நாள் உண்ணாவிரதம் இருக்கப் போகும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் இந்த உண்ணாவிரதத்தில் மைத்ரேயன், தம்பிதுரை ஆகிய எம்பிக்கள் பங்கேற்கவுள்ளனர்.
அமைதி, மத நல்லிணக்கத்திற்காக 3 நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நரேந்திர மோடி அறிவித்துள்ளார். குஜராத் மதக் கலவர வழக்கில் நரேந்திர மோடியை விசாரிப்பது குறித்து கீழ் நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும்.
இதில் நாங்கள் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இந்த உண்ணாவிரதத்தை அறிவித்தார் மோடி.
நாளை முதல் இந்த உண்ணாவிரதம் தொடங்கவுள்ளது. இந் நிலையில் இந்த உண்ணாவிரதத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக எம்பிக்கள் மைத்ரேயன், தம்பிதுரை ஆகியோர் நரேந்திர மோடியை அகமதாபாத்தில் சந்தித்து ஜெயலலிதாவின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இருவரும் நாளை மோடியின் உண்ணாவிரதத்திலும் பங்கேற்கலாம் என்று தெரிகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக