உடலின் ரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் இயக்கம் இன்றி இருக்கும் போது ரத்த செல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு எலும்புகளில் தாதுப் பற்றாக்குறை ஏற்படும்.
இதுவே எலும்பு தேய்மானத்துக்கு முக்கிய காரணம் ஆகிறது. உடலின் வளர்ச்சிக்கு ஏற்ப எலும்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. எலும்புகளின் அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன.
கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் இடையில் பரவி எலும்புக்கு வலு சேர்க்கின்றன. இந்த இயக்கமானது உடலில் எப்போதும் நடப்பதால் கால்சியம் சத்து அதிகம் தேவைப்படுகிறது.
இந்த சத்துக்கள் பால், பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் இருந்து கிடைக்கிறது. வயது, உழைக்கும் தன்மை இரண்டையும் கருத்தில் கொண்டு சரியான உணவு முறையை கடைபிடிப்பது எலும்பு தேய்மானத்தை தவிர்க்க உதவும்.
குழந்தைகளுக்கு வளர்ச்சியின் காரணமாக உடல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற வலிகள் தானாகவே சரியாகி விடும். அவர்களுக்கு கை, கால் ஆகியவற்றில் வலி ஏற்படும் போது வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுத்தால் போதும்.
வலிக்கும் பகுதிகளில் வீக்கம், தொடு வலி, நொண்டுதல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்னைகள் இருக்கும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இதேபோல் குழந்தைகள் படிக்கும் வயதில் எவ்வித உடற்பயிற்சியும் இன்றி இருந்தால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கும்.
எனவே கால்சியம் உணவுகளை உட்கொள்வதுடன் குழந்தைப் பருவத்தில் இருந்தே உடற்பயிற்சியை வழக்கப்படுத்துவது அவசியம். பொதுவாக ஒருவருக்கு எலும்பு தேய்மானம் இருக்கும் பட்சத்தில் இடுப்பு, தோள், மணிக்கட்டு, முட்டி, முதுகு, கழுத்து உள்ளிட்டவற்றில் திடீரென வலி ஏற்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.
பரம்பரைக் காரணங்கள், கால்சியம் குறைபாடு, உடற்பயிற்சி இன்றி இருத்தல், எடை அதிகம் இருத்தல், மதுப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல், வேறு நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகள், முன் கூட்டியே ஏற்படும் மெனோபாஸ், பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை அகற்றுதல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்மானம் உண்டாகிறது.
வயது 30ஐத் தொட்டவர்கள் வைட்டமின் டி மற்றும் கால்சியம் உள்ள உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறி, பால், முட்டை மற்றும் கடல் உணவுகள், கொட்டை வகைகள் ஆகியவற்றில் வைட்டமின்&டி அதிகம் உள்ளது.
வாரத்தில் மூன்று முறை 15 நிமிடங்களாவது வெயிலில் இருக்க வேண்டும். எலும்புகள் உறுதியிழப்பைத் தடுக்க தினமும் 20 நிமிடம் வாக்கிங் செல்ல வேண்டியது கட்டாயம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏரோபிக்ஸ் மற்றும் நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகள் நல்ல பலன் தரும். எலும்புகளை உறுதி செய்யும்.
எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் தசை வலுப்படுத்தும் பயிற்சிகளை பிசியோதெரபி மருத்துவரின் ஆலோசனையுடன் செய்ய வேண்டியது அவசியம்.
புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை படிப்படியாக குறைத்து விட்டு, விடுவது நல்லது. எலும்பு தேய்மானத்துக்கான அறிகுறி உள்ளவர்கள் எலும்பு தேய்மானத்தின் அளவை அதற்கான கருவிகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதன் மூலம் மட்டுமே எலும்பு தேய்மானத்துக்கு தீர்வு காண முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக