தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.8.11

ஜன் லோக்பால் மசோதாவில் பல குறைகள் அத்வானி பல்டி


அன்னா ஹசாரே குழு உருவாக்கியுள்ள ஜன் லோக்பால் மசோதாவில் நிறைய குறைபாடுகள் உள்ளதால் அதை அதே வடிவிலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது கஷ்டம் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று கூறினார்.
முன்னதாக நேற்று அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதாவை முழுமையாக
ஆதரிப்பதாக பாஜக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விஷயத்தில் பாஜகவின் மெளனம் குறித்து நேற்று மாலை ஹசாரே கேள்வி எழுப்பினார். மேலும் தங்களது கட்சி இந்த விவகாரத்தில் அமைதி காப்பதாக அக் கட்சியின் மூத்த தலைவர்களான யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர். எம்பி பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் பாஜக தலைமையை மிரட்டினர்.
இந் நிலையில் அன்னா குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜரிவால், பிரசாந்த் பூஷண் ஆகியோர் பாஜக மூத்த தலைவர் அத்வானி நேற்றிரவு தனது இல்லத்துக்கு வரவழைத்துப் பேசினார். அப்போது கட்சித் தலைவர்களான நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோரும் உடனிருந்தனர்.
இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கெஜரிவால், ஜன் லோக்பாலை முழுமையாக ஆதரிப்பதாக பாஜக உறுதியளித்துள்ளது என்றார்.
அருண் ஜெட்லி கூறுகையில், எங்களது ஆதரவை அவர்களுக்குத் தெரிவித்துள்ளோம். ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் பாஜக மிகத் தெளிவாகவே உள்ளது என்றார்.
நிதின் கட்காரி கூறுகையில், நாங்கள் சொன்ன சில கருத்துக்களையும் அன்னா குழு ஏற்றுக் கொண்டுள்ளது. நாங்கள் அன்னா குழுவுக்கு ஆதரவாக உள்ளோம் என்றார்.
பாஜக அடித்த பல்டி:
இந் நிலையில் இன்று ஐஐடி மாணவர்களை சந்தித்த அத்வானி, ஜன் லோக்பால் மசோதா விதிமுறைகளில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன என்பது எனக்குத் தெரியும். இதை ஹசாரே குழுவிடம் நேற்று விளக்க முயன்றேன்.
அந்த மசோதாவை அந்த வடிவிலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது கஷ்டம். அதனால், அரசு கொண்டு வரும் லோக்பால் மசோதாவையே போதிய அளவில் திருத்தங்கள் செய்து நிறைவேற்றலாம். அதே நேரத்தில் அதை ஜன் லோக்பால் என்றே அழைக்கலாம்.
இதை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடமும் கூறியுள்ளேன் என்றார் அத்வானி.
முன்னதாக அக் கட்சியின் ராஜ்யசபா துணைத் தலைவர் அலுவாலியா கூறுகையில், ஜன் லோக்பால் மசோதாவை வரும் 30ம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா ஹசாரே கால நிர்ணயம் செய்து எச்சரிக்கை விடுத்திருப்பது ஏற்புடையது அல்ல. இந்த விஷயத்தில் அவருக்கு பாஜக ஆதரவு அளிக்காது என்றார்

0 கருத்துகள்: