தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.8.11

மூவருக்கு செப். 9ந்தேதி தூக்கு தண்டனை: போராட்டங்கள் தீவிரம்


ராஜிவ் கொலையாளிகள் 3 பேரையும் செப்டம்பர் 9ம் தேதி தூக்கில் இடுவதற்கான உத்தரவு சிறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவர் பிரதிபா
பாட்டீலுக்கு கருணை மனுக்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்களின் கருணை மனுக்களை பிரதிபா பாட்டீல் நிராகரித்துவிட்டார். இதன் பிறகு தூக்கு தண்டனையை உறுதி செய்யும் குடியரசுத் தலைவர் அலுவலக உத்தரவு நகல் இன்று வேலூர் சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இம்மூவரையும் தூக்கில் இடுவதற்கான தேதி முடிவு செய்யப்பட்டது. வரும் செப்டம்பர் 9ம் தேதி இம்மூவரும் தூக்கில் இடப்படுவர் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, இவர்கள் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழர் அமைப்புகள், மாணவர்கள் உள்ளிட்டோர் பேரணி, ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் வேலூர் சிறை சூப்பிரண்டு மூலம் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனு அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161-ன் படி தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த மனுவின் நகல்கள் தமிழக கவர்னர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, உள்துறை செயலாளர், உள்துறை இயக்குனர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அவர்களது வக்கீல் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவை பைசல் செய்யும் வரை தூக்குதண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க கோரி உயர் நீதிமன்றத்தில் 3 பேரும் மனு தாக்கல் செய்கிறார்கள். திங்கள் கிழமை மனுதாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்ற வளாகத்தில் பெண் வக்கீல்கள் சுஜாதா, கயல்விழி, வடிவாம்பாள் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். மேலும் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி வக்கீல்கள் கிருஷ்ணகுமார், முருகபாரதி, சங்கரன் உள்பட ஏராளமான வக்கீல்கள் கையெழுத்து வேட்டை நடத்தி முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதே போல் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று திடீர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டை ரயில் நிலைய தண்டவாளத்தில் உட்கார்ந்து 100 மாணவர்கள் போராட்டம் செய்தனர். தகவல் அறிந்து ரயில்வே போலீசார் விரைந்து வந்தனர். அவர்களை சமாதானம் செய்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும் அரை மணி நேரம் கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதேபோல கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் நிலையத்தில் மற்றொரு பிரிவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளச்சேரி ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியிலும் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

0 கருத்துகள்: