பெல்கிரேடு:ஐ.நா நீதிமன்றம் போர்க்குற்றவாளியாக அறிவித்த கோரன் ஹாடிக்கை செர்பியா கைது செய்துள்ளது. 1991-95 ஆம் ஆண்டில் குரோஷியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை படுகொலைச் செய்த வழக்கில் ஹாடிக்(வயது 52) குற்றவாளியாவார்.
குரோஷியாவில் செர்ப் பிரிவினைவாதிகளின் தலைவராக இருந்தார் ஹாடிக். போஸ்னிய
செர்ப் ராணுவத் தளபதியாக இருந்த போர் பயங்கரவாதி ரத்கோ மிலாடிச்சை கைதுச் செய்து இரண்டு மாதத்திற்கு பிறகு செர்பியா இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் உறுப்பு நாடாக முயன்றுவரும் செர்பியா சர்வதேச அழுத்தத்தை தொடர்ந்து பிராந்தியத்தின் கடைசிக் குற்றவாளியான ஹாடிக்கை கைதுச் செய்துள்ளது.க்ரோட்சுகளையும், செர்பியர்கள் அல்லாதவர்களையும் போர்க் காலத்தில் கூட்டுப் படுகொலைச்செய்ய ஹாடிக் தலைமை வகித்துள்ளான்.
வடக்கு பெல்கிரேடில் ஃப்ருஸ்கா கோரா பகுதியில் குடும்ப வீட்டிற்கு அருகே தலைமறைவாக ஹாடிக் வாழ்ந்துவந்துள்ளான்.
ஆட்களை அச்சுறுத்தி கொலைச்செய்து, மனிதகுலத்திற்கு எதிரான மாபாதக குற்றம் செய்தது உள்பட 14 வழக்குகளில் 2004 ஆம் ஆண்டு ஹாடிக் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹாடிக் தலைமறைவானான்.
யூகோஸ்லாவியாவிலிருந்து சுதந்திரநாடாக மாறும் குரோஷியாவின் முயற்சிகளை தடுப்பதே ஹாடிக்கின் தலைமையிலான செர்ப் ரிபப்ளிக் க்ராஜினா பிரிவினை பயங்கரவாத அமைப்பின் நோக்கமாகும்.
1991-ஆம் ஆண்டு உகோவர் நகரத்தில் 300க்கும் அதிகமானோரை கொலைச் செய்து 20 ஆயிரம் பேரை நாடுகடத்திய செயலுக்கு தலைமை வகித்தது ஹாடிக் ஆவார். இவரை கைதுச்செய்ய மூன்று ஆண்டுகளாக புலனாய்வு குழு முயற்சி செய்ததாக செர்பியன் அதிபர் போரிஸ் டாடிச் தெரிவித்துள்ளார்.
செர்பியாவின் நடவடிக்கையை ஐரோப்பிய யூனியன் வரவேற்றுள்ளது. ஐரோப்பிய வரலாற்றில் வேதனைகரமான அத்தியாயத்திற்கு இத்துடன் முடிவு ஏற்பட்டுள்ளது என நேட்டோ பொதுச்செயலாளர் ஆண்ட்ரூ ரஸ்மூஸன் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக