தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.7.11

தீவிரவாத தாக்குதல் குறித்த ராகுலின் கருத்துக்கு சிவசேனா கண்டனம்

மும்பை குண்டு வெடிப்பை, ஆப்கனில் நடக்கும் பயங்கரவாதச் சம்பவங்களோடு ஒப்பிட்டு, ராகுல் கூறியது, மிகவும் தவறானது. அவருக்கு எதிராக, ராஜ துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, சிவசேனா கட்சி கூறியுள்ளது.
இது தொடர்பாக சிவசேனா எம்.பி., சஞ்சய் ரவுத் கூறியதாவது:-
மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தை, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் ஒப்பிட்டு, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார். இது தவறான நடவடிக்கை. மக்களை பாதுகாப்பதற்காகவே உங்களை தேர்வு செய்துள்ளோம். ஆப்கனில் நடக்கும் தாக்குதல்களை, மும்பை தாக்குதலுடன் ஒப்பிடுவது, குண்டு வெடிப்பில் உயிரிழந்த மக்களை, அவமதிக்கும் செயல். இதற்காக, ராகுல் மீது, ராஜ துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும். ராகுல், இந்தியாவில் வசிக்க தகுதியுடையவர் அல்ல. இவ்வாறு சஞ்சய் ரவுத் கூறினார்.
சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், "பயங்கரவாத சம்பவங்களிலிருந்து, மும்பை மக்கள் விரைவில் மீண்டு விட்டனர் என, காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். அத்துடன் இந்த சம்பவத்தை மறந்து விடுகின்றனர். அப்பாவி மக்கள் ஏன் பலியாக வேண்டும். இதற்கு யார் பொறுப்பேற்பது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மும்பையில் தாக்குதல்கள் நடக்கின்றன. மத்தியில் அரசாங்கம் இருக்கிறதா என்றே தெரியவில்லை" என்றார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் கூறுகையில், "குண்டு வெடிப்புகளில் இருந்து, மும்பை மக்கள் விரைவாக மீண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்தாலும், குண்டு வெடிப்பு நடந்த இடங்களிலிருந்து, செய்தி ஒளிபரப்பிய டிவி சேனல்களின் நடவடிக்கை சரியானது அல்ல. துயரமான ஒரு சம்பவம் நடக்கும்போது, அதுபற்றிய விளக்கமான தகவல்களை வெளியிடுவதுடன், இதை நாங்கள் தான் முதலில் வெளியிட்டோம் என, கூறும் டிவி மீடியாக்களின் நடவடிக்கை மோசமானதாக உள்ளது" என்றார்.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலையும் தடுத்து நிறுத்துவது கடினம் என்று கூறினார். அதற்கு பா.ஜனதா, இடதுசாரிகள், சிவசேனா ஆகிய கட்சிகளும், உ.பி. முதல்-மந்திரி மாயாவதியும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இருப்பினும், ராகுல் கருத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், `120 கோடி மக்கள் கொண்ட நாட்டில், எல்லாமே பாதுகாப்பானது என்று யாரும் கூறமுடியாது. அமெரிக்காவில் கூட தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், தினந்தோறும் குண்டு வெடிப்பு நடந்து வரும் பாகிஸ்தானை விட நாம் சிறப்பாக இருக்கிறோம்' என்றார்.
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், `தீவிரவாதிகளுக்கு ஒரு தடவை அதிர்ஷ்டம் இருந்தாலே போதும். ஆனால் பாதுகாப்பு படையினருக்கு ஒவ்வொரு தடவையும் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால், ராகுல் கருத்தில் தவறு இல்லை' என்றார்.

0 கருத்துகள்: