தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.5.11

ஒசாமா படுகொலையை ஏன் கண்டிக்கவேண்டும்?



இஸ்லாமாபாத்தில் இருந்து மேற்கே 150 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள அபோடாபாத் என்னும் உட்புறப் பகுதியில் ஒசாமா பின் லேடன் நேற்று அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாக ஒபாமா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 'ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களைப் பலிவாங்கிய ஒசாமா பின் லேடன் என் ஆணையின்படி அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டுள்ளார்.' ஒபாமா தொடர்கிறார். 'அமெரிக்கா இஸ்லாத்துக்கு எதிராக இந்தப் போரை நடத்தவில்லை, இனியும் அவ்வாறு செய்யாது என்பதை மீண்டும் உறுதிபடுத்திக்கொள்கிறோம்.'

அதாவது, இதுவரை நடந்ததும், தற்போது நடந்துகொண்டிருப்பதும், இனி நடக்கவிருப்பதும் தீவிரவாதத்துக்கு எதிரான போர்தானே தவிர இஸ்லாத்துக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான போர் அல்ல. அப்படி யாராவது ஒருவேளை நினைத்திருந்தால்
தவறுக்கு வருந்திவிடுங்கள். மேலும், நேற்று இரவு, கடாபியின் மகனும் மூன்று பேரப்பிள்ளைகளும் அமெரிக்க ஆதரவு நேடோ படைகளால் கொல்லப்பட்டதும்கூடதீவிரவாதத்துக்கு எதிரான போரின் தவிர்க்கமுடியாத ஓர் அத்தியாயம்தான் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இராக், ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் என்று தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் இந்த நீண்ட போரின் தொடக்கப்புள்ளி 9/11 என்று வைத்துக்கொண்டால், அந்த 9/11 எதற்காக நிகழ்த்தப்பட்டது? தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டாவது அமெரிக்காவைத் தாக்கியழிக்கவேண்டும் என்று சில இஸ்லாமிய அமைப்புகள் வரிந்துகட்டிக்கொண்டு போரில் குதிக்க என்ன காரணம்? பின் லேடன் எப்படி உருவானார்? அவரை வளர்த்தவர்கள் யார்? பயிற்சி கொடுத்து கொம்பு சீவி விட்டது யார்? ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து பின்னோக்கி போய்கொண்டே இருந்தால், அத்தனைக் காரணங்களுக்கும் விளைவுகளுக்கும் ஆதாரப் புள்ளியாக அமெரிக்கா திகழ்வதைக் காணமுடியும்.

யோசித்துப் பாருங்கள். மனிதகுலத்துக்கு எதிராக ஒசாமாவின் அல் காய்தா இழைத்த அத்தனைக் குற்றங்களையும் ஒபாமாவின் அமெரிக்கா இழைத்திருக்கிறது. இன்னமும், அல் காய்தா இழைக்காத ஆட்சிக்கவிழ்ப்புகளையும், அரசியல் படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் அமெரிக்கா சர்வ சாதாரணமாக நடத்தியிருக்கிறது. தொடர்ந்து நடத்திவருகிறது. என்றாலும், ஒசாமாவின் படுகொலையை இன்று ஒபாமாவால் தர்க்க ரீதியாக நியாயப்படுத்திவிட முடிகிறது. ஆம், என் கட்டளையின்படி அமெரிக்கப் படைகளால் ஒசாமா கொல்லப்பட்டார் என்று மைக் முன்னால் நின்று அறிவிக்கமுடிகிறது. மனிதகுலத்தின் எதிரி எங்களால் ஒழிக்கப்பட்டுவிட்டான் என்று பெருமிதம் கொள்ள முடிகிறது.

இந்தப் பெருமித உணர்வு அமெரிக்கா தாண்டியும் பரவிக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. 'அமெரிக்காவோ ஆப்பிரிக்காவோ, யாரால் அழிந்தால் என்ன? எப்படியும் தீவிரவாதிதான். ஒசாமா கொல்லப்பட்டதை இஸ்லாமியர்களே கொண்டாடும்போது, நாம் ஏன் வெத்துக்கு அமெரிக்காவைத் திட்டிக்கொண்டிருக்கவேண்டும்?' அதாவது, ஒசாமா தீவிரவாதி, குற்றவாளி. எனவே அவன் தண்டிக்கப்படவேண்டியவன். அவ்வளவுதான்.

டிசம்பர் 2006ல் இராக்கின் அதிபர் சதாம் உசேன் வேட்டையாடப்பட்டு, கைது செய்யப்பட்டு, போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டபோது வெளிப்பட்ட அதே நியாயவாத தர்க்கம். சதாம் குற்றமிழைத்தவன். எனவே, தண்டிக்கப்படவேண்டியவன். இராக் மீதும் ஆப்கனிஸ்தான் மீதும் பாகிஸ்தான் மீதும் இப்போது லிபியா மீதும் நடத்தப்படும் போர்களும் இதே முறையில்தான் நியாயப்படுத்தப்படுகின்றன.

தவறிழைத்தவன் தண்டிக்கப்படுவான். ஒற்றை வரி நியாயம். ஒற்றை வரி தர்மம்.

எனில், அமெரிக்காவின் தவறுகளுக்கு யார் தண்டனை அளிப்பது? நம் கண்முன்னே சீனியர் புஷ்ஷும் ஜூனியர் புஷ்ஷும் தற்போது ஒபாமாவும் இழைத்து வரும் போர்க்குற்றங்களை யார் விசாரிப்பது? யார் தண்டிப்பது? தவறிழைத்தவன் தண்டிக்கப்படுவான் என்னும் தர்மமும் நியாயமும் ஒபாமாவுக்குப் பொருந்தாதா? அல் காய்தாவுக்கான தர்மமும் அமெரிக்காவுக்கான தர்மமும் வெவ்வேறா?

என்றால், ஆம். சதாமின் படுகொலையைப் போலவே ஒசாமாவின் படுகொலையையும் உலகம் ஏற்றுக்கொண்டுவிட்டது. அமெரிக்கப் போரில் கொல்லப்பட்ட பல லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்களின் படுகொலைகளும் இப்படித்தான் அமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன. ‘

அல் காய்தாவையும் அமெரிக்காவையும் வெவ்வேறு கோணத்தில் இருந்து பார்க்க நாம் பழகிவிட்டோம். ஒசாமாவின் படுகொலையைக் கொண்டாடுவது மட்டுமே இப்போது நமக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரே வாய்ப்பு. இதை மீறி வேறு எந்தக் கேள்வியையும் எழுப்ப முடியாது. எழுப்பினால் குற்றச்சாட்டுகளும் கேள்விகளும் பறந்து வரும். அப்படியானால் நீ ஒசாமாவை ஆதரிக்கிறாயா? இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஆதரிக்கிறாயா? இஸ்லாமிய ஷரியத் சட்டங்களையும் காட்டுமிராண்டித்தனமான சட்டங்களையும் காட்டாட்சியையும் ஆதரிக்கிறாயா?

எதற்கு ஆதரிக்கவேண்டும்? ஒசாமாவின் படுகொலையைக் கண்டிக்கிறேன் என்று சொன்னால் அது இஸ்லாத்தின் அத்தனைப் பிற்போக்குத்தனத்தையும், இஸ்லாமியர்கள் இழைத்த அத்தனை தவறுகளையும் ஆதரிப்பதாக ஏன் எடுத்துக்கொள்ளப்படுகிறது? இது ஒரு நூதன அரசியல் உத்தி அல்லவா? ஒன்று என்னுடன் இரு அல்லது அவர்களுடன் இரு என்னும் புஷ்ஷின் அயோக்கிய சித்தாந்தம் அல்லவா இது?

அமெரிக்காவா அல் காய்தாவா? இதுதான் இப்போது அமெரிக்கா எழுப்பியுள்ள கேள்வி. ஒசாமாவா ஒபாமாவா? தீவிரவாதமா தீவிரவாத எதிர்ப்பா? பயங்கரவாதமா ஜனநாயகமா? புத்திசாலித்தனமான இந்தக் கேள்வியை நம் பக்கம் நகர்த்திவிட்டு, மீண்டும் போரை விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்துவிட்டது அமெரிக்கா.

ஒசாமாவின் படுகொலையை நாம் சுலபமாக ஏற்றுக்கொண்டுவிட்டால், அமெரிக்காவின் கை மேலும் வலுவாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அந்த வகையில், ஒசாமாவின் படுகொலையை நிச்சயமாகக் கண்டிக்கவேண்டும். நன்றி:மருதன் இணையதளம்

0 கருத்துகள்: