தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.4.11

ம.தி.மு.க., தொண்டர்கள் தி.மு.க.,வுக்கு மானசீக ஆதரவு: முதல்வர் பேட்டி


பல இடங்களில் ம.தி.மு.க., தொண்டர்கள் தி.மு.க.,வுக்கு நேரடியாகவும், மானசீகமாகவும் ஆதரவு தருகின்றனர். ஒன்றுபட்ட திராவிட இயக்கத்தை காணும் சூழ்நிலை விரைவில் வரும் என்பதற்கு இது அடையாளம்,” என்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் கருணாநிதி கூறினார்.
அவரது பேட்டி:
* தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படியுள்ளது?
பிரகாசமாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும்.
* எவ்வளவு இடங்கள் கிடைக்கும்? மத்தியமைச்சர் மு.க.அழகிரி கூட 200 தொகுதிக்கு மேல் வெற்றிபெறுவோம் என கூறியுள்ளாரே?

அவரவர் விருப்பம் போல சொல்வர். தி.மு.க., பெரும்பான்மை பெறும்.
* பெரும்பான்மை பெற என்ன காரணம் என கருதுகிறீர்கள்?
தி.மு.க., அரசு நடந்த காலத்தில் செய்த சாதனைகள் சொல்கிறோம். குறிப்பிடும்படியாக ஏழைகள் குடிசைகளில் இருக்க கூடாது என திட்டமிட்டு அறிவித்து, 40 லட்சம் குடிசைகளை அகற்றி அதற்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கும் திட்டம் நடந்து கொண்டுள்ளது. இதுவரை 1.10 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகள், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கட்டி முடிக்கப்படும் என்ற எண்ணம் மக்களுக்கு இருப்பதும் ஒரு காரணம்.
* மின்பற்றாக்குறை பெரிய குறையாக உள்ளதே?
தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முற்படும் போது, மேலும் தொழிற்சாலைகள் வர துவங்குகின்றன. தொழிற்சாலைகள் வளர, வளர மின்தேவை அதிகப்படுகிறது. அதற்கு ஏற்ப, மின்உற்பத்தி செய்ய வேண்டும். இடையில் அ.தி.மு.க., அரசு ஆண்ட போது, மின் உற்பத்திக்கு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அந்த தவறு எங்கள் தலையில் விழுந்துள்ளது. மின் உற்பத்திக்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அவைகளை நிறைவேற்றி வரும் நிலையை உருவாக்கியுள்ளோம். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், அந்த திட்டங்கள் வரிசையாக நிறைவேற்றப்படும். எதிர்காலத்தில் மின்வெட்டு இருக்காது.
* ம.தி.மு.க.,வின் இரண்டாம் நிலை தலைவர்கள் சிலர் தி.மு.க.,வுக்கு ஆதரவாக பேசி வருகிறார்களே?
ம.தி.மு.க., தொண்டர்கள் தி.மு.க.,வுக்கு நேரடியாகவும், மானசீகமாகவும் ஆதரவு தருவதாக நானும் கருதுகிறேன். திராவிட இயக்கங்கள் ஒன்றாக இருந்து உறுதிபட கொள்கைகளை நிறைவேற்றிய வேண்டிய நிலையில், இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஒற்றுமை குறைந்து மாற்றாருக்கு இடம் தருவதாக ஆகி விட்டது. ஒன்றுபட்ட திராவிட இயக்கத்தை காணும் சூழ்நிலை விரைவில் வரும் என்பதற்கு இது அடையாளம். ம.தி.மு.க.,வினர் இந்த தேர்தலில் பல இடங்களில் எங்களை ஆதரித்து கொண்டுள்ளனர்.
* “தி.மு.க.,விடமிருந்து தமிழகத்தை மீட்பேன்’என ஜெயலலிதா கூறியுள்ளாரே?
அவர் முதலில் பெங்களூரு கோர்ட்டில் உள்ள நகைகளை மீட்கட்டும்.
* தேர்தல் கமிஷன் செயல்பாடு ஒருதலைபட்சமாக இருப்பதாக ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தீர்களே?
தேர்தல் கமிஷன் என்பது தன்னை அரசியல் இயக்கமாக ஆக்காமல், நடுநிலையுடன் பணிபுரிய வேண்டும். கோர்ட்டுகளை போல தேர்தல் கமிஷன் நடத்த வேண்டும். ஆனால் கோர்ட்டுகளே சில நேரங்களில் தடுமாறும் போது, தேர்தல் ஆணையத்தில் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்ளும் நிலை வராமல் பார்த்து கொள்ள வேண்டும். உலக கோப்பையை இந்திய அணியினர் வென்ற போது, மற்ற மாநிலங்கள் அறிவித்தது போல, தி.மு.க., அரசு ரூ.4 கோடி பரிசு அறிவித்தது. இதுபோன்ற அறிவிப்பை வெளியிட தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற வேண்டும். கமிஷனிடம் அனுமதி பெற்றோம். அனுமதி என்ன நிபந்தனையுடன் தரப்பட்டது என்றால், முதல்வர் அந்த பரிசை வழங்குவது போல படம் எடுக்க கூடாது என்பது தான்( சிரிப்புடன்). தேர்தல் கமிஷனில் ஏற்கனவே பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள முக்கிய அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் உதவியை கொண்டு தேர்தல் கமிஷன் இப்போது செயல்படுகிறது என்ற பேச்சு அடிபடுகிறது.
* மத்தியமைச்சர் மு.க.அழகிரி மீது எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனவே?
மு.க.அழகிரி மீது எதிர்அணியினர் எப்போதுமே கோபத்தை காட்டி வருகின்றனர். தங்கள் ஆதிக்கத்தில் இருந்த மதுரை மாவட்டத்தில், மத்திய அமைச்சர் செல்வாக்கு பெறுவதும், தேவையான நல்ல காரியங்கள், வசதிகளை நடத்தி வருவதும் எதிர்கட்சி கூட்டணியில் வெறுப்பை ஏற்படுத்தி, அதனால் அவர் மீது பொய் புகார்களை கூறுகிறார்கள்.
* கோவையில் எதிர்கட்சி கூட்டணிகள் நடத்திய கூட்டத்தை விஜயகாந்த் புறக்கணித்துள்ளாரே?
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வந்திருக்கிறாரே. அது போதாதா. அவர் தி.மு.க., குடும்ப கட்சியாக இருப்பதாக கூறியுள்ளார். தி.மு.க., குடும்ப கட்சியாக இருக்கலாம்; ஆனால் அவரை போல குடும்பத்தை குலைத்த கட்சி அல்ல.
* கிரைண்டர், மிக்ஸி போன்ற இலவச அறிவிப்புகள் ஊழலுக்கு வழிவகுக்கும் என பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளதே?
பதில் சொல்ல விரும்பவில்லை.
* தமிழக தேர்தல் முடிவுகள் மத்தியில் எதிரொலிக்குமா?
எதிரொலிக்கும்
* எப்படி?
அது எதிரொலிக்கும் போது தெரியும்.
* தமிழகத்தில் ஆங்காங்கே தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்களே?
அந்த பணம் யாருடையது? எந்த கட்சியுடையது என அறிவிக்கவில்லை.இவ்வாறு பேட்டியளித்தார்.
கிறிஸ்தவ ஆலயங்கள் கட்டலாம்: தேர்தல் அறிக்கையில் இணைக்க வேண்டியவை குறித்து பலரும் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் சேர்த்து கொள்ளப்பட்ட அம்சங்கள் குறித்து கருணாநிதி அறிவித்ததாவது: இந்து மதத்தினர், அவர்களுக்கு சொந்தமான அல்லது அரசு புறம்போக்கு இடத்தில் வழிபாட்டு தலங்கள் கட்ட விரும்பினால், உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறுவது போல, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் வழிபாட்டு தலங்கள் கட்ட விரும்பினால், அனுமதி பெற வேண்டும். அதை உள்ளாட்சி அமைப்புகள் பரிசீலித்து அனுமதி வழங்கும். உலக வெப்பமயமாக்கல் காரணமாக பூகோள மாற்றத்தால், சுனாமி வரலாம் என விஞ்ஞானிகள் கூறி வருவதால், கடலோர கிராமங்களில் தேவையான தூண்டில்வளைவு, கடல் அரிப்பு பாதுகாப்பு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை யானைமலை தொல்லியல் துறை எடுக்கப்போவதாக ஓராண்டுக்கு முன் செய்தி வெளியானது. வைகோ போன்றவர்கள் யானைமலையை பாதுகாக்க வேண்டும் என குரல் கொடுத்தனர். அப்போது தமிழக அரசு அதை மறுத்தது. தற்போதும் அதில் எந்த மாற்றமும் இல்லை. யானைமலை பாதுகாக்கப்படும்.
அதிகார வர்க்கத்திலும் எட்டப்பர்கள்
* மாநில அதிகாரிகள் சிலர் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என நினைக்கிறீர்களா?
அதிகார வர்க்கத்திலும் எட்டப்பர்கள் உண்டு.
* கதாநாயகி (ஜெயலலிதா), கதாநாயகருக்கு (விஜயகாந்த்) எதிராக சிரிப்பு நடிகர் (வடிவேலு) இறக்கி விடப்பட்டுள்ளாரே?
அதற்கு வடிவேலு தேவையில்லை. மக்களே பார்த்து கொள்வர்.

0 கருத்துகள்: