தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.4.11

வன்னி இறுதிப் போரில் இலங்கை அரசின் இன்னொரு போர்க் குற்றம்: அம்பலப்படுத்தும் மனித உரிமைக் காப்பகம்



இறுதி யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 20பேர் காணாமல் போயுள்ளதாகவும் இதற்கு சிறிலங்கா அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்றும் அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சரணடைந்த பின்
அவர்களை சிறிலங்கா இராணுவத்தினர் விசாரணை செய்த பின் அவர்கள் காணாமல் போயிருப்பதாகவும், சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் இவர்கள் இருந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேசை விசாரிக்கும் வீடியோ காட்சி ஒன்றையும் மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது.
இரு தரப்பும் போர் நடந்த காலத்தில் போர் குற்றத்தை புரிந்ததாகவும், இதனை விசாரிப்பதற்கென பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதி அக்குழு தனது அறிக்கையை சிறிலங்காவிடம் கையளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மனித உரிமை கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்கள், படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் சிறிலங்கா அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்றும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவு பணிப்பாளர் பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்களின் உறவினர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்கு உரிமை உண்டு என்றும் இதற்கு சிறிலங்கா அரசாங்கம் தகுந்த பதிலை கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதி போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் 20பேர் மே16ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதிவரையான காலப்பகுதியில் இராணுவத்தின் தடுப்பு காவலில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்: