டோக்கியோ, பூகம்பம் மற்றும் சுனாமியால் நிலைகுலைந்த ஜப்பானுக்கு உலக நாடுகள் உதவி அளிக்க முன்வந்து உள்ளன.
ஜப்பானில் கடந்த வெள்ளிக்கிழமை பூகம்பம், மற்றும் சுனாமி ஆகியவை ஒருசேர தாக்கின. 33 அடி உயரத்துக்கு எழுந்த ஆழிப்பேரலையால் சென்டாய் நகரமே அடியோடு அழிந்தது. கட்டிடங்களையும், ஓடும் ரயில்களையும் இந்த ஆழிப்பேரலை புரட்டி போட்டது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். லட்சக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக உலக நாடுகள் உதவி வழங்க முன்வந்து உள்ளன. மீட்பு பணிகளை செய்வதற்காக பேரிடர் நிவாரண அதிகாரிகள் குழுவை ஐ.நா. சபை அனுப்பி உள்ளது. நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக கடற்படை வீரர்களுடன் ஒரு குழுவை அமெரிக்கா அனுப்பி உள்ளது. இந்த குழுவினர் ரொனால்டு ரீகன் என்னும் விமானந்தாங்கி கப்பல் மூலம் ஜப்பானுக்கு விரைகிறார்கள்.
பசிபிக் கடலில் நிறுத்தப்பட்டு இருக்கும் அமெரிக்க போர்க்கப்பல்களும் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இந்த கப்பல்களில் உள்ள கடற்படை வீரர்களும் ஜப்பானில் நிவாரண பணிகளை மேற்கொள்வார்கள். மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக 2 தேடுதல் குழுவை அமெரிக்கா அனுப்பி உள்ளது. இந்த 2 குழுக்களிலும் 140 பேரும் 12 மோப்ப நாய்களும் இடம்பெற்று இருப்பார்கள். இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருப்பவர்களை கண்டுபிடிப்பதில் இந்த மோப்ப நாய்கள் பயிற்சி பெற்றவை. அணுஉலையில் ஏற்பட்டு இருக்கும் சேதத்தை கட்டுப்படுத்த ஜப்பானுக்கு உதவுவதற்காக 2 நிபுணர்களையும் அது அனுப்பி உள்ளது. இது தவிர டோக்கியோவில் அமெரிக்க தூதரகம் உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ஜப்பானுக்கு ரூ.25 கோடியை கொடுத்து உள்ளது.
ஜப்பானிய மக்களுக்கு உதவுவதற்காக இந்தியா விமானம் நிறைய கம்பளி போர்வைகள் மற்றும் கூடாரங்களை முதல் கட்டமாக அனுப்பி உள்ளது. டெல்லியில் உள்ள ஜப்பானிய தூதருடன் கலந்து பேசி அவசரத் தேவையாக கருதப்பட்ட கம்பளி போர்வைகளை இந்தியா அனுப்பி உள்ளது என்று இந்திய வெளிநாட்டு செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்தார். ஜப்பானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளோடும் நிருபமா ராவ் தொடர்பு கொண்டு இருக்கிறார். அங்கு ஜப்பானியர்களுக்கு தேவைப்பட்ட உதவிகள் பற்றிய விவரங்களை கேட்டு வருகிறார். அடுத்த கட்டமாக அவை அனுப்பப்படும்.
மருத்துவக்குழு உள்பட நிவாரண பணிகளில் ஈடுபட 200 பேர் கொண்ட ஒரு குழுவை தென்கொரியா அனுப்ப திட்டமிட்டு உள்ளது. நிவாரண குழுவை அனுப்புவதற்காக 3 விமானங்கள் ஆயத்தமாக உள்ளன.
சீனா, 15 பேர் கொண்ட நிவாரண குழுவை அனுப்பி உள்ளது. சிங்கப்பூரும் நிவாரணப்பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு குழுவை அனுப்பி உள்ளது. தாய்லாந்து நாடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக முதல்கட்டமாக ஒரு கோடி ரூபாயை அனுப்பி உள்ளது. மேலும் உதவத்தயாராக இருப்பதாகவும் அது தெரிவித்து உள்ளது.
இங்கிலாந்து நாடு 11 டன் நிவாரண பொருள்களுடன் 63 தேடுதல் குழுவை அனுப்பி உள்ளது. 2 மோப்ப நாய்களும் அனுப்பப்பட்டு உள்ளன. ஹெவி லிப்டிங், கட்டிங் எந்திரங்களும் அனுப்பப்பட்டு உள்ளன.
பிரான்ஸ் நாடு, தீ அணைப்பு படை வீரர்களையும், 12 மோப்ப நாய்களையும், 49 டன் நிவாரண பொருள்களையும் அனுப்பி உள்ளது. மற்றும் ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் நிவாரண குழுக்களை அனுப்பி வைத்து உள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக