தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.3.11

ஜப்பான் சுனாமி பேரழிவுக்கு உதவி செய்யத் தயார்: பிரதமர் மன்மோகன்சிங்


புதுடெல்லி, மார்ச். 12- ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி பேரழிவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து ஜப்பான் பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.
ஜப்பானில் நேற்று மிகக் கடுமையான பூகம்பமும், 33 அடி உயர சுனாமி பேரலைகளும் ஏற்பட்டன. இதனால், கிழக்கு கடலோரப் பகுதி முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜப்பான் பிரதமர் நியோடா கானுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம்
அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், "ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்கிய தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த பேரழிவில் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து வாடும் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தருணத்தில் ஜப்பான் மக்களுக்கும், ஜப்பான் அரசுக்கும் இந்தியா உறுதுணையாக இருக்கிறது. ஜப்பானுக்கு எந்த வகையிலான உதவியையும் வழங்க இந்தியா தயாராக இருக்கிறது" என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். எனவே, அவர்களுடைய நிலைமை குறித்து இந்தியாவில் உள்ள உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுனாமி மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானில் வாழும் மக்களுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இந்தியா தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறது. சுனாமியில் உயிரிழந்த மக்களுக்காக இரங்கல் தெரிவிக்கிறது. பெரிய அளவில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு வருத்தம் அடைகிறது. மீட்பு பணிகளுக்கு உதவி செய்யவும் இந்தியா தயாராக இருக்கிறது.
இது தொடர்பாக, ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதியுள்ளார். இதுபோல, வெளியுறவு துறை மந்திரியும் ஜப்பான் மந்திரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். டெல்லியில் உள்ள ஜப்பான் தூதரிடம் வெளியுறவு செயலாளர் கவலை தெரிவித்தார்.
ஜப்பானில் வசிக்கும் 25 ஆயிரம் இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்கின்றனர். கன்டோ மற்றும் கன்சாய் பகுதிகளில் பெரும்பாலானோர் வசிக்கின்றனர். அங்கு சேதம் நிகழ்ந்ததாக எந்த வித தகவலும் வரவில்லை. டோக்கியோ மற்றும் ஓசாகா நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலமாக இந்தியர்களை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம்.
அவர்களின் நிலைமை கவனிக்கப்பட்டு வருகிறது. ஜப்பானில் உள்ள இந்தியர்களின் நிலைமையை தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறோம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் 24 மணி நேர உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக தகவல்களை பெறலாம். மையத்தின் தொலைபேசி எண்கள்: 00813-32622391 முதல் 97 வரை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி: தமிழ் கூடல்

0 கருத்துகள்: