கெய்ரோ, பிப்எகிப்தில், அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் அங்கு போராட்டம் ஓய்ந்து அமைதி திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
எகிப்து நாட்டில் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகவேண்டும் என்று கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று 13-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. போராட்டம் காரணமாக தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட பல நகரங்களில் கலவரம் ஏற்பட்டது. கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. சில இடங்களில் அரசின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ராணுவமும் களத்தில் குதித்தது. எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்தும் வகையில் ஆளும் தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முபாரக் நேற்று முன்தினம் விலகினார். இதேபோல் அவரது மகன் கமால் முபாரக்கும் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகினார்.
அமெரிக்க ஜனாபதி ஒபாமாவும் எகிப்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக முயற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பாக அவர் பல்வேறு நாடுகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த எகிப்து அரசு முன்வந்தது. துணை அதிபர் ஓமர் சுலைமான் போராட்டம் நடத்தி வரும் எதிர்க்கட்சி குழுக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட `முஸ்லிம் சகோதரத்துவம்' அமைப்பின் பிரதிநிதிகளை நேற்று அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முகமது எல்பராடி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு குழுக்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கைதான அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தினார்கள்.
எகிப்தில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் கொண்டு வருவது என்றும், ஜனாதிபதி தேர்தலில் பலர் போட்டியிடும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வது பற்றி ஆராய நீதிபதிகள், அரசியல் தலைவர்கள் அடங்கிய கமிட்டி அமைப்பது என்றும் பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்பட்டது. இந்த கமிட்டி வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் தனது அறிக்கையை வழங்கும்.
அதிபரின் பதவி காலத்தை வரையறுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளை துணை அதிபர் ஓமர் சுலைமான் ஏற்றுக் கொண்டார். அத்துடன் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்றும், பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட மாட்டாது என்றும் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்பட்ட தகவலை எகிப்து அரசாங்கம் வெளியிட்டது.
பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட முஸ்லிம் சகோதரத்துவம் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில்; அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அதன் நல்லெண்ணத்தை தெரிவித்து இருப்பதாகவும், ஆனால் உறுதியான மாற்றங்களுக்கான அம்சங்கள் அதில் இல்லை என்றும் தெரிவித்தார்.
கெய்ரோவில் உள்ள விடுதலை சதுக்கத்தில் நேற்றும் பல்லாயிரக்கணக்கான பேர் கூடி இருந்து அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வழக்கமான பணிகளை கவனிக்க வேண்டும் என்றும், அமைதி திரும்ப முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ராணுவ தளபதி ஹாசன் அல்-ரவுனி கேட்டுக் கொண்டார்.
எகிப்து அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த நாட்டில் அமைதி திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் முபாரக் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம், தலைநகர் கெய்ரோவில் உள்ள அருங்காட்சியகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் அங்குள்ள 2 மம்மிகள் (பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள மனித உடல்கள்) சேதம் அடைந்ததாக தகவல் வெளியானது. ஆனால் இதை எகிப்து தொல்லியல் துறையின் தலைவர் சாஹி ஹவாஸ் மறுத்து உள்ளார். கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் அருங்காட்சியகத்தில் உள்ள `மம்மி'கள் எதுவும் சேதம் அடையவில்லை என்றும், அங்கிருந்து இரு மண்டை ஓடுகள் மட்டும் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் பி.பி.சி. டெலிவிசனுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்து உள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக