மும்பை தாக்குதல் வழக்கு குறித்து விசாரிப்பதற்காக பாகிஸ்தானுக்கு செல்ல இருக்கும் இந்திய தேசிய புலனாய்வு குழுவுக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி அன்று பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பையில் புகுந்ததால் அவர்களை அனுப்பி வைத்த சதிகாரர்கள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. அதே நேரத்தில், மும்பை தாக்குதலின்போது உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி முகமது அஜ்மல் கசாப் மீது தனியாக விசாரணை நடைபெறுகிறது.
இதற்கிடையே, மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய சாட்சிகள் மற்றும் இந்தியாவை சேர்ந்த அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அனுமதிக்குமாறும், அதற்காக, நீதித்துறை கமிசன் ஒன்றை அனுப்பிவைப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது. அந்த கோரிக்கையை இந்தியா பரிசீலித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், மும்பை தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக பாகிஸ்தான் செல்ல இருந்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் குழுவுக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அனுப்பியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாகிஸ்தான் நாட்டு சட்டத்தின்படி, எந்தவொரு வழக்கு விசாரணைக்காகவும் எந்தவொரு வெளிநாட்டு புலனாய்வு அமைப்பையும் எங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது. இந்தியாவின் கோரிக்கையையும் பாகிஸ்தானில் இருந்து நீதித்துறை கமிசனை அனுப்புவதையும் ஒப்பீடு செய்யக் கூடாது. ஏனெனில், நீதிமன்ற நடைமுறையின் ஒரு பகுதியாகவே அது அமைகிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே, `பரஸ்பர சட்ட ரீதியான ஒத்துழைப்பு ஒப்பந்தம்' எதுவும் கிடையாது. எனவே, பாகிஸ்தானுக்கு இந்திய புலனாய்வு குழுவை அனுப்பி வைப்பது தொடர்பான கோரிக்கையை ஏற்க முடியாது. இவ்வாறு பாகிஸ்தான் அனுப்பிய செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதனால், சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பிறகே தேசிய புலனாய்வு குழுவை இந்தியா அனுப்ப முடியும். மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை மேலும் தாமதப்படுத்துவதற்காகவே இந்திய புலனாய்வு குழுவுக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது என கருதப்படுகிறது.
இது தவிர, மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை பிடித்து தண்டனை வழங்குவதில் பாகிஸ்தானுக்கு ஆர்வம் இல்லை. ஏனெனில், விசாரணைக்கு எதிராக அந்த நாட்டின் கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு சார்பாக இதுவரை மேல் முறையீடு செய்யப்படவில்லை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக