தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.2.11

தமிழ்நாட்டில் இன்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்குகிறது

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தமிழ்நாட்டில் இன்று தொடங்கி 28 ந்தேதி முடிவடைகிறது.


தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:


சென்சஸ் 2011 க்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நாடு முழுவதும் நாளை (9 ந்தேதி) தொடங்கி 28 ந்தேதி முடிவடைகிறது. இந்த பணிக்காக 20 லட்சத்து 47 ஆயிரம் வட்டங்கள் உருவாக்கப்பட்டு 24 கோடி வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.2ஆயிரத்து 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆசிரியர்கள் உள்பட 11/2 லட்சம் பேர் ஈடுபடுகிறார்கள்.


கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் 150 முதல் 200 குடும்பங்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பார்கள். ஒரே கால கட்டத்தில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.


இந்த கணக்கெடுப்பின்போது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர், சாதி, பிறந்ததேதி, வயது, தாய்மொழி, திருமணத்தின்போது வயது, மதம், ஷெட்ழூல் வகுப்பு, எழுத்தறிவு நிலை, கல்வி நிறுவனங்கள் செல்பவர்களின் எண்ணிக்கை, தெரிந்த மொழிகள், மாற்றுத்திறனாளி அதிக பட்சம் படித்தது உள்பட 29 வகையான தகவல்கள் திரட்டப்படும்.


இந்த கணக்கெடுப்பு பணி சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆணையாளர் முன்னிலையில் நடைபெறும். தமிழகம் முழுக்க 150 நகராட்சிகளின் ஆணையாளர்கள் கணக்கெடுப்பு பணிக்கான பொறுப்பாளராக செயல்படுவார்கள், மற்ற இடங்களில் வட்டாட்சியர்கள் தலைமையில் கணக்கெடுப்பு பணி நடைபெறும்.


ஒருசேர அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் கணக்கெடுப்பு பணி நடைபெறும். மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் கட்ட பணி கடந்த ஆண்டு ஜுன், ஜுலை மாதங்களில் நடைபெற்றது. அப்போது வீட்டுப்பட்டியல்கள், வீடுகள் கணக்கெடுப்பு பணி முடிக்கப்பட்டது. இதில், எங்கெங்கு மக்கள் வசிக்கின்றனர் எவ்வளவு வீடுகள் உள்ளன. மின்சார வசதி, குடிநீர் வசதி முதலியவை கணக்கெடுக்கப்பட்டன. அதனடிப்படையில், தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறும். இதற்கு காலநீட்டிப்பு கிடையாது.


8 பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு படிவம் உபயோகப்படுத்தப்படும். ஒரு குடும்பத்தில் அதற்கு மேற்பட்டவர்கள் இருந்தால், கூடுதல் படிவம் உபயோகப்படுத்தப்படும்.


கணக்கெடுப்பு பணி நடைபெறும்போது அந்த வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவு நாட்களாக உள்ளனர், எங்கிருந்து வந்தனர் போன்ற விவரங்கள் கேட்கப்படும். குடும்பத்தில் இருப்பவர்களில் யாராவது ஒருவர் வெளிழூரில் இருந்தால், அவரதுபெயர் சேர்க்கப்படாது.


மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது உள்ள தனிப்பட்ட தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். அதனால், தயக்கமில்லாமல் அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும்.


கணக்கெடுப்பு பணிக்கு பெரும்பாலும், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் தங்களது வசதிக்கு ஏற்றாற்போல், கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவார்கள். கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ள நபர்களுக்கு மட்டுமே பொதுமக்கள் தகவல் தர வேண்டும்.


கணக்கெடுப்பு பணிக்கு வரும்போது விவரம் தெரிந்த நபர் ஒருவர் வீட்டில் இருந்து தகவல்களை கூறினால் போதும். சென்னையை பொறுத்தவரை குறிப்பிட்ட சில நாட்களுக்குள் வீடுகளுக்கு பணியாளர்கள் கணக்கெடுப்பு பணிக்கு வரவில்லை என்றால் மாநகராட்சியின் புகார் எண். 1913 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.


இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட கணக்கெடுப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த பகுதியில், அந்த வீடுகளில் கணக்கெடுப்பு பணி நடைபெறும். சென்னையில் கணக்கெடுப்பு பணிக்கு மொத்தம் 9 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


சில பள்ளி நிர்வாகமும், மத்திய அரசு ஊழியர்கள் சிலரும் கணக்கெடுப்பு பணிக்கு ஈடுபட மறுத்தனர். சட்டதிட்டங்களை விளக்கிய பின்னர் அவர்கள் கணக்கெடுப்பு பணிக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளனர்.


கணக்கெடுப்பு பணிக்கு வரும் அலுவலர்களிடம் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து தகவல்களை தெரிவிக்க வேண்டும். ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.


கணக்கெடுப்பு இறுதி நாளான பிப்ரவரி 28 ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் நடைபாதையில் வசிப்பவர்கள் மற்றும் வீடற்றவர்கள் குறித்து கணக்கெடுக்கப்படும் என்றார்.

0 கருத்துகள்: