நான் இருவரை சுட்டுக்கொன்ற விஷயத்தில் துணிந்து வழக்கை எதிர்கொள்வேன் என்று பாகிஸ்தானில் கைதான அமெரிக்க அதிகாரி ரேமண்ட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.
முறைப்படி வழக்கை எதிர்கொள்வதற்கு அரசுரீதியான அதிகாரம் தனக்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லாகூரில் உள்ள கோட் லாக்பட் சிறையில் ரேமண்ட் டேவிஸ் அடைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு நலன் கருதி சிறைக்குள்ளேயே அவரிடம் நீதி விசாரணை நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் அப்துல் சாமட் ஆஜரானார். தமது தரப்பில் வாதாட ரேமண்ட் டேவிஸ் இன்னும் வழக்கறிஞரை அமர்த்தாததால் அவர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை.
வெள்ளிக்கிழமை விசாரணையின் போது ரேமண்டுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விவரம் குறித்த ஆவணம் அவரிடம் அளிக்கப்பட்டது. அந்த ஆவணத்தில் தகவல்கள் அனைத்தும் உருது மொழியில் இருந்ததால் அதை அவர் வாங்க மறுத்துவிட்டார். தனக்கு உருது மொழி தெரியாது என்றும், ஆங்கிலத்தில் உள்ள ஆவணத்தை தருமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஆயுதம் ஏந்திய இருவரும் தன்னிடம் வழிப்பறி செயலில் ஈடுபட முயன்றனர். அதனால் தற்காப்புக்காக அவர்களை தான் சுட வேண்டியதாயிற்று என்றும் நீதிபதியிடம் ரேமண்ட் தெரிவித்தார். இதை அரசு தரப்பு வழக்கறிஞர் மறுத்தார்.
ரேமண்ட் வேண்டுமென்றே இருவரையும் சுட்டுக்கொன்றதாகவும், அவருக்கும் தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறினார். இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார் ரேமண்ட். இதைத்தொடர்ந்து அடுத்த வழக்கு விசாரணையை மார்ச் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி யூசுப். அடுத்த விசாரணைக்குள் தமது தரப்பில் ஆஜராக வழக்கறிஞரை அமர்த்த வேண்டும் என்றும் ரேமண்டை கேட்டுக்கொண்டார்.
பாகிஸ்தானில் கடந்த மாதம் ஆயுதத்துடன் வந்த இருவரை ரேமண்ட் டேவிஸ் சுட்டுக்கொன்றார். இதையடுத்து அவரை ஜனவரி 27-ம் தேதி பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். ரேமண்ட் டேவிஸ் அமெரிக்க உளவுத்துறையின் ஏஜென்ட் என்றும், அவருக்கு சில பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருக்கிறது என்றும் பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இதை அமெரிக்கா மறுத்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே உள்ள நல்லுறவைக் கருத்தில் கொண்டு ரேமண்டை விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா பலமுறை வேண்டுகோள்விடுத்தும் அதை பாகிஸ்தான் கண்டுகொள்ளவில்லை.
நன்றி: தமிழ்கூடல்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக