பெர்லின், பிப். 26 லிபியாவில் அதிபர் மம்மர் கடாஃபிக்கு ஆதரவான ராணுவ வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபடும் மக்களை சுட்டுத்தள்ளுவதால் அந்நாடு போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. இதனால் தங்களது நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணியில் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
மீட்புப் பணியை ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள 27 நாடுகளும் கைகோத்து மேற்கொண்டுள்ளன
விமானங்களையும், கப்பல்களையும் லிபியாவுக்கு அனுப்பி மக்களை மீட்டு வருகின்றன. "கடந்த 2 தினங்களில் லிபியாவில் இருந்து 350 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்பதற்கு 3 போர்க்கப்பல்கள் அங்கு விரைந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கப்பலில் ஜெர்மானியர்கள் மட்டுமல்லாது விரும்பினால் பிற ஐரோப்பிய நாட்டவரும் ஏறிக்கொள்ளலாம்" என்று ஜெர்மனி வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.லிபியாவில் கிரீஸ் நாட்டு மக்களும் கணிசமாக வசித்து வருகின்றனர். கிளர்ச்சியால் அவர்களும் லிபியாவைவிட்டு வெளியேற தீர்மானித்துள்ளனர். அவர்களை தாயகத்துக்கு அழைத்துவர கிரீஸ் நாடு 3 விமானப் படை விமானங்களை அனுப்பி வைத்துள்ளன. இந்த விமானங்கள் லிபியாவின் தலைநகர் திரிபோலிக்கு சென்றுள்ளன.
இந்த விமானங்களில் விரும்பினால் பிற ஐரோப்பிய நாட்டவரும் பயணிக்கலாம் என்று அந்நாடும் அறிவித்துள்ளது.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த 6000-க்கு மேற்பட்டோர் லிபியாவில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க அந்நாடு கடற்படை கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது. மீட்புப் பணிக்கு உதவ விமானப் படை வீரர்களும் சென்றுள்ளனர். லிபியாவில் இருந்து இதுவரை தங்களது நாட்டைச் சேர்ந்த 550 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இன்னும் 200 பேர் அங்கு கிளர்ச்சிக்கு நடுவில் சிக்கியிருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலோர் அங்கேயே தங்க விரும்புவதாகவும் அந்நாடு கூறியுள்ளது.
இதனிடையே, அதிபர் மம்மர் கடாஃபி அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் ஸ்விட்சர்லாந்தில் முதலீடு செய்துள்ள நிதி அனைத்தையும் அந்நாட்டு அரசு முடக்கியுள்ளது.
இதற்கான உத்தரவை ஸ்விட்சர்லாந்து அரசு வியாழக்கிழமை மாலை பிறப்பித்தது. இந்திய அரசியல் தலைவர்களும் குடும்பத்தாரும் ஸ்விட்சர்லாந்தில் கோடிக்கணக்கான ரூபாயை கறுப்புப் பணமாக மறைத்து வைத்திருப்பதுபோல் கடாஃபியும் அவரது குடும்பத்தாரும் கோடிக்கணக்கான கறுப்புப் பணத்தை ஸ்விட்சர்லாந்தில் குவித்து வைத்துள்ளனர். இந்த பணம் முழுவதும் இப்போது முடக்கப்பட்டுள்ளன.
நன்றி: தமிழ் கூடல்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக