மஹிந்த ராஜபக்ஷ |
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அவசர பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்குற்றங்கள் மற்றும் சித்தரவதை தொடர்பாக அவருக்குரிய பங்கு குறித்து அமெரிக்கா விசாரிக்க வேண்டுமென சரவதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கோரியுள்ளது.
இது பற்றி அந்நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பகுதிக்கான இயக்குனர் சாம் ஜாஃப்ரி பிபிசியிடம் கூறுகையில் இலங்கை இராணுவத்தின் மீது, நம்பத்தகுந்த, பாரதூரமான மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தின் தலைமை தளபதியாக அதிபர் மகிந்த ராஜபக்சே இருக்கிறார். எனவே இந்த மனித உரிமை மீறல்கள் நடந்தபோது இராணுவ அதிகார கட்டளைத்தொடரின் அதி உயர் பதவியில் இருந்தவர் என்ற முறையில் பொறுப்பேற்றல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அம்னெஸ்டியின் இந்த கோரிக்கை தவறானது, சட்டரீதியில் சாத்தியமற்றது என்கிறார் இலங்கை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜீவ் விஜய சிங்க.
இது தொடர்பாக பிபிசியிடம் கருத்து தெரிவித்த அவர், ஒரு நாட்டின் தலைவருக்கு முன்பு ஒருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் முன் அவர் மீதான குற்றங்களை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இதை உலக நீதிமன்றங்கள் செய்ய வேண்டும் என்றும் கூறிய அவர், சூடானின் ஜனாதிபதிக்கு இது போல நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இத்தகைய உலக நீதிமன்றங்கள் செயல்பட உதவும் சர்வதேச ஒப்பந்தங்கள் பலவற்றில் அமெரிக்கா கைச்சாத்திடவில்லை வில்லை என்பதோடு, அமெரிக்கா செய்த போர் குற்றங்கள் தொடர்பில் அந்த நாடு இதுவரை பொறுப்பேற்க விரும்பவில்லை என்பது உலகுக்குத் தெரியும் என்பதால், மஹிந்த மீதான புகார்கள் தொடர்பில் அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்றும் ராஜீவ் விஜயசிங்க வாதிட்டார்.
புறக்கணிப்பு கோரிக்கை
இதற்கிடையே, இலங்கையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள இலக்கிய விழாவை துருக்கியின் நன்கு அறியப்பட்ட எழுத்தாளரான ஆர்ஹான் பாமுக் அவர்களும் மற்றவர்களும் புறக்கணிக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் புகழ் பெற்ற எழுத்தாளர்களான நோம் சாம்ஸ்கி மற்றும் அருந்ததி ராய் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காலி இலக்கிய விழாவில் எழுத்தாளர்கள் கலந்து கொள்வது, இலங்கையில் பேச்சு சுதந்திரத்தை நசுக்கும் செயலை நியாயப்படுத்துவது போலாகும் என இவர்கள் கூறுகின்றனர்.
ஆயினும் இந்தக் கோரிக்கையை விழா ஏற்பாட்டாளர்கள் விமர்சித்துள்ளனர். இந்த இலக்கிய விழாவானது நன்மை செய்வதற்கான உந்துசக்தி என்று அவர்கள் வர்ணித்துள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக