காஷ்மீர் பகுதியிலிருந்து யார் சீனா வர விரும்பினாலும் அவர்களுக்குத் தனி விசா அளித்து குசும்புத்தனம் செய்து வந்தது சீனா. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனாலும் அதைக் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் சீன பிரதமர் வென் ஜியாபோ இந்தியா வந்தார்.
இதையடுத்து அவரது வருகைக்கு முன்பு அந்த குசும்புத்தனத்தை நிறுத்தி வைத்தது சீனா. ஆனால் தற்போது அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனி விசா கொடுக்க ஆரம்பித்துள்ளது சீனா. அருணாச்சல் பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் பூஜான் மாகாணத்தில் ஜனவரி 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை சீன பளு தூக்கும் போட்டி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு இந்திய பளுதூக்கும் சங்கத் தலைவர் ஆப்ரகாம் டெக்கி மற்றும் அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பளுதூக்கும் வீரர் ஆகியோருக்கு சீன பளு தூக்கும் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் மென்குவாங் அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்து இருவரும் பெய்ஜிங் செல்ல விசா கோரி விண்ணப்பித்தனர். ஆனால் அவர்களுக்கு வழக்கமான விசா தராமல் (அதாவது இந்தியர்களுக்கான) தனி தாளில் விசா அளித்தது சீன தூதரகம்.
இந்த விசாவுடன் இருவரும் பெய்ஜிங் செல்ல டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கு இருவரது விசாக்களையும் பரிசீலித்த இந்திய குடியேற்றத்துறை அதிகாரிகள் விசா சரியில்லை என்று கூறி இருவரையும் திருப்பி அனுப்பினர்.
இதையடுத்து சீன தூதரகத்தை அணுகி இருவரும் விசாரித்துள்ளனர். அதற்கு சீன தூதரக அதிகாரிகள் சரியான விசாதான் கொடுத்திருக்கிறோம் என்று கூறினாரம்.
இதுகுறித்து டெக்கி கூறுகையில், எங்களை சீனா அவமதித்து விட்டது. எங்களை மட்டுமல்லாமல் அருணாச்சல் பிரதேச மாநில மக்களையும் சீனா அவமதித்துள்ளது என்றார்.
சீனாவின் இந்த செயல் இந்தியாவை எரிச்சலடைய வைத்துள்ளது. வென் ஜியாபோ வந்து பேசி உறுதி மொழி அளித்து விட்டுச் சென்ற போதிலும் தொடர்ந்து சீனா இதுபோல நடந்து வருவது குறிப்பிடத்தக்கது
நன்றி : தட்ஸ் தமிழ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக