தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.7.12

குஜராத் இனப்படுகொலை:வாஜ்பாய்-கே.ஆர்.நாராயணன் இடையேயான கடித தொடர்பு விபரங்களை வெளியிடக் கூடாது – நீதிமன்றம்!


புதுடெல்லி:குஜராத் இனப் படுகொலையின் போது அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கும், குடியரசு தலைவர் கே.ஆர்.நாராயாணனுக்கும் இடையே நடந்த கடித பரிமாற்றங்கள் குறித்த விபரங்களை வெளியிடக் கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடித தொடர்பு விபரங்களை வெளியிட வேண்டும் என்ற தேசிய தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உத்தரவை நீதிமன்றம் ரத்துச் செய்தது.
கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது அன்றைய பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய்க்கும், குடியரசு தலைவர் கே.ஆர்.நாராயணனுக்கும் இடையே நடந்த கடித பரிமாற்றங்களைக் குறித்து தெரிவிக்க கோரி சி.ரமேஷ் என்பவர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். மத்திய அரசு தர மறுத்ததை தொடர்ந்து அவர் தேசிய தகவல் அறியும் உரிமை ஆணையத்தை அணுகினார். ஆணையம், ரமேஷுக்கு கடித தொடர்பு விபரங்களை அளிக்குமாறு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு ஆணையத்தின் உத்தரவிற்கு எதிராக நீதிமன்றத்தை அணுகியது. மத்தியஅரசின் மனுவை நேற்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அனில்குமார் தனது தீர்ப்பில், “குடியரசு தலைவருக்கும், பிரதமருக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றங்கள் குறித்த விபரங்களை, மனுதாரருக்கு அளிக்கும்படி, மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவிட முடியாது. அமைச்சரவை குழு, ஜனாதிபதிக்கு தெரிவித்த விவரங்களை பகிரங்கப்படுத்துவதை, இந்திய அரசியலமைப்பு சட்டம் தடை செய்கிறது. விதிமுறைப்படி, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு மட்டுமே, இதுபோன்ற தகவல்களை கேட்பதற்கு அதிகாரம் உள்ளது. மத்தியதகவல் ஆணையத்துக்கு இந்த அதிகாரம் இல்லை. இதுதொடர்பாக தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. எனவே, தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை தள்ளுபடிச் செய்வதோடு, கடிதப் பரிமாற்ற விவரங்களை தரும்படி கோரி, மனுதாரர் ரமேஷ் தாக்கல் செய்த மனுவும், தள்ளுபடி செய்யப் படுகிறது. இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
News@thoothu

0 கருத்துகள்: