தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.5.12

சி.என்.என் -ஐ.பி.என் நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளால் மமதா கோபம் – மாவோயிஸ்டுகள் என கூறி வெளியேறியதால் பரபரப்பு!


கொல்கத்தா:30 ஆண்டுகாலமாக மேற்கு வங்காளத்தை ஆட்சிபுரிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் வெறுப்புற்ற மே.வங்க வாக்காளர்கள் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கு நாட்டை ஆளும் வாய்ப்பை வழங்கினர். ஆனால், அவரோ தனக்கு வானாளாவிய அதிகாரம் வழங்கப்பட்டது போல தனக்கு எதிராக நியாயமாக எழும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் பொறுமையோ, தவறுகளை திருத்தும் பண்போ இல்லாமல் சர்வாதிகாரி போல நடந்து வருகிறார்.
இந்நிலையில் மமதா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசின் முதல் ஆண்டு நிறைவையொட்டி ஆங்கில செய்தி சேனலான சி.என்.என் – ஐ.பி.என் மமதாவுடன் நேர்முக நிகழ்ச்சிக்கு ஏற்பாடுச் செய்தது.
மமதாவுடன் கலந்துரையாட பல்வேறு பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் வந்திருந்தனர்.
நேர்முக நிகழ்ச்சியில் மாணவி ஒருவர், ஜாத்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் அம்பிகேஷ் மஹாபாத்ராவின் கைது(மமதா அரசின் ஆட்சிமுறையை கிண்டல் செய்து கார்ட்டூன் வரைந்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார்) மற்றும் மே.வங்காள மாநிலத்தில் அதிகரித்துவரும் மகளிருக்கு எதிரான வன்முறைகள் ஆகியன குறித்து மமதாவிடம் கேள்வி எழுப்பினார்.
கேள்வி கேட்ட மாணவியிடம் கோபத்தில் பொரிந்து தள்ளிய மமதா, “கேள்வி கேட்கும் நீங்கள் எஸ்.எஃப்.ஐ (சி.பி.எம்மின் மாணவர் பிரிவு) மற்றும் சி.பி.எம்மைச் சார்ந்தவர்கள்” என சத்தம் போட்டு கூறினார். மகளிருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதைக் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் மமதா, “மே.வங்காளத்தில் இத்தகைய வன்முறைகள் எதுவும் நடைபெறவில்லை. இதுவெல்லாம் மாவோயிஸ்டுகளின் கேள்விகள்” என்று கிண்டலாக கூறினார்.
மாவோயிஸ்டுகளின் நிலைப்பாட்டைத்தான் சி.பி.எம் மேற்கொள்கிறது என்று கடுமையாக பேசினார். இறுதியாக, “ஜாத்பூர் பல்கலைக்கழகத்தை தவிர வேறு மாணவர்கள் இங்கு இல்லையா?” என தொலைக்காட்சி சேனல் தொகுப்பாளரிடம் கேள்வி எழுப்பிய மமதா நிகழ்ச்சியில் இருந்து விருட்டென்று வெளியேறினார்.
news@thoothu

0 கருத்துகள்: