தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.4.12

மக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த சிரியா ஒப்புதல் அளித்துள்ளதாக கோபி அன்னன் தகவல்.


சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் தலைமையிலான சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதை ஒடுக்க மக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறார் அசாத். குறிப்பாக டமாஸ்கஸ், ஹாம்ஸ் உள்பட முக்கிய நகரங்களில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட

6,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இதற்கு ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மக்களுக்கு எதிரான ராணுவ தாக்குதலை நிறுத்த ஐ.நா. முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன் தலைமையில் அரபு லீக் சமரச குழுவினர், சிரியா அரசுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, ஏப்ரல் 10ம் தேதிக்குள் ராணுவத்தை வாபஸ் பெறுவதாகவும் மக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துவதாகவும் சிரியா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை கோபி அன்னன் நேற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் சூசன் ரைஸ் கூறுகையில், ஏப்.10ம் தேதிக்குள் ராணுவத்தை வாபஸ் பெறுவதாக, கோபி அன்னனுக்கு சிரிய வெளியுறவுத் துறை அமைச்சர் கடிதம் அனுப்பி உள்ளார்.
இதற்கு ஆதரவு அளிக்கும்படி உலக நாடுகளை அன்னன் வேண்டிக் கொண்டுள்ளார். அன்னனுடைய அமைதி திட்டத்துக்கு சிரியா எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்றார். ஆனால், கடந்த காலங்களில் அளித்த வாக்குறுதிகளை சிரியா நிறைவேற்றவில்லை. அதுபோல் ஏப்.10க்குள் படைகளை வாபஸ் பெறுவோம் என்று கூறுவதை நம்புவதற்கில்லை என்று மேற்கத்திய நாடுகள் சந்தேகம் எழுப்பி உள்ளன.

0 கருத்துகள்: