தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.3.12

அமெரிக்கச் சிப்பாய் வெளியே கொண்டுசெல்லப்பட்டதற்கு ஆப்கான் மக்கள் காட்டம்.


ஆப்கானிஸ்தானில் வகைதொகையின்றி துப்பாக்கிச்சூட்டை நடத்தி பொதுமக்கள் பலரைக் கொன்றிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அமெரிக்கச் சிப்பாய், ஆப்கானிஸ்தானிலிருந்து குவைத்துக்கு விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டு விட்டார் என்பதை நேட்டோ படையணியின் அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் உறுதிசெய்துள்ளார்.சம்பந்தப்பட்ட சிப்பாய் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியே கொண்டு
செல்லப்படுகிறார் என்பது ஆப்கானிய அரசாங்கத்தின் அதிகார உச்சத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்திருக்கவே வேண்டும், அவ்வாறு கொண்டுசெல்லப்படுவதை அவர்கள் ஏற்றிருக்கவே செய்வார்கள் எனலாம்.
ஆனாலும் இந்தச் சிப்பாய் வெளியே கொண்டுசெல்லப்பட்டுவிட்டது ஆப்கானிய மக்கள் பலரிடையே ஆத்திரத்தைத் தோற்றுவித்துள்ளது.
அந்த சிப்பாய் ஆப்கானிஸ்தானிலேயே வழக்கை சந்திக்க வேண்டும் என்று ஆப்கனிய மக்கள் பலர் விரும்புகின்றனர்.
ஆப்கானிய சட்டங்களின் கீழ் இந்த சிப்பாய் விசாரிக்கப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையல்ல, ஆனால் ஆப்கானிய மண்ணில் வைத்து விசாரிக்கப்பட வேண்டும் என்பதையே அவர்கள் கேட்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் குற்றமிழைத்ததாகக் கூறப்படும் அமெரிக்கச் சிப்பாய்கள் அனைவரும் அமெரிக்க இராணுவத்தின் விசாரணைக் கட்டமைப்பு மூலமாகவே விசாரிக்கப்படுவார்கள் என்பதை அமெரிக்கா ஏற்கனவே தெளிவுபடுத்தி இருப்பதால், இவர்கள் கேட்பதுபோல அந்தச் சிப்பாய் ஆப்கானிஸ்தானில் வைத்து விசாரிக்கப்பட மாட்டார் என்றே தெரிகிறது.
காந்தஹாரில் இந்தக் கொலைகளைச் செய்த சிப்பாயின் பெயர் இதுவரை வெளியிடப்பட்டிருக்கவில்லை.
ஒரு சிப்பாய் மீது முறைப்படியான குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படாதவரை அவருடைய பெயரை வெளியிடுவதில்லை என்பதே அமெரிக்க பாதுகாப்புதுறையினர் கடைப்பிடிக்கின்ற நடைமுறை ஆகும்.
இந்தக் கொலைகளின் எதிரொலியாக ஆப்கானிஸ்தானிய கிராமங்களில் நேட்டோ படையினர் ரோந்துப் பணி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஆப்கானிய அதிபர் கர்சாய் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 கருத்துகள்: