தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.1.12

தேர்தல் கமிஷன் குறித்து பேசியதற்காக நான் வருத்தம் தெரிவிக்கப் போவது இல்லை: சல்மான் குர்ஷித் உறுதி


புதுடெல்லி, ஜன. 15- தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் பேசியதாகவும், தேர்தல் கமிஷனின் அதிகாரத்தை குறைத்து மதிப்பிடும் வகையில் பேசியதாகவும், மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மீது, தேர்தல் கமிஷன் அதிருப்தி அடைந்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், 'இதற்காக நான் வருத்தம்
தெரிவிக்கப் போவது இல்லை' என, சல்மான் குர்ஷித் உறுதியாக கூறியுள்ளார்.
மத்திய சட்ட அமைச்சரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான சல்மான் குர்தஷித்தின் மனைவி லூசி, உ.பி., சட்டசபை தேர்தலில், பரூக்காபாத் தொகுதியில் காங்., வேட்பாளராக போட்டியிடுகிறார். சில நாட்களுக்கு முன் அங்கு பிரசாரம் செய்த சல்மான் குர்ஷித்," இதர பிற்படுத்தப் பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில், சிறுபான்மையினருக்கு ஒன்பது சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படும்" என்றார்.
அமைச்சரின் இந்த பேச்சு, தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளது என, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. "மதத்தின் பெயரால், நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், சல்மான் குர்ஷித் பேசியுள்ளார்" என, பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக, விளக்கமளிக்கும்படி சல்மான் குர்ஷித்துக்கு தேர்தல் கமிஷன் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதுபோல், சமீபத்தில் 'டிவி' சானலுக்கு பேட்டி அளித்த சல்மான் குர்ஷித், "தேர்தல் கமிஷன், சட்ட அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தேர்தல் கமிஷனர்களின் சுற்றுப் பயணம் தொடர்பான ஆவணங்களில் சட்ட அமைச்சகம்தான் கையெழுத்திட வேண்டும்" என, கூறியிருந்தார்.
இந்த விவகாரமும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகார் அளித்தார். அதில், "தேர்தல் கமிஷன் என்பது, தனி அதிகாரம் கொண்ட அமைப்பு. யாரும் அதை கட்டுப்படுத்த முடியாது. சட்ட அமைச்சரின் பேச்சு, தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளை குறைத்து மதிப்பிடுவது போல் அமைந்துள்ளது" என, கூறியிருந்தார்.
இந்த பிரச்சினை குறித்து சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் நேற்று கேட்டபோது, "இந்த விவகாரம் தொடர்பாக நான் வருத்தம் தெரிவிக்கப் போவது இல்லை. சட்ட விரோதமாகவோ, தவறாகவோ கூறியிருந்தால் தானே வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
 நான் அப்படி எதுவும் கூறவில்லையே. கடந்த 2009 தேர்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு அளிக்கப்படும் என, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
அதை அடிப்படையாக வைத்துதான், நான் கருத்து தெரிவித்து இருந்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள நோட்டீசுக்கு பதில் அளித்துள்ளேன்" என்றார்.
சல்மான் குர்ஷித் விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளதை அடுத்து, இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு பிரதமர் மன்மோகன்சிங் பதில் அனுப்பியுள்ளார். அதில், "தேர்தல் கமிஷன், தனி அதிகாரம் கொண்ட அமைப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில், ஏதாவது குளறுபடி நிகழ்ந்திருந்தால், அதை அரசு, கவனத்தில் எடுத்துக் கொள்ளும்" என, பிரதமர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 கருத்துகள்: