தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.12.11

ஹிலாரியின் கோரிக்கையை நிராகரித்த கிலானி


நேட்டோ தாக்குதல் விவகாரத்தால் அமெரிக்கா - பாகிஸ்தான் உறவு சீர்குலைவதை அனுமதிக்க முடியாது என அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன்(Hillary Clinton) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.ஜேர்மனியின் பான்(Bonn) நகரில் இன்று(5.12.2011) தொடங்க உள்ள ஆப்கானிஸ்தான் எதிர்காலம் பற்றிய சர்வதேச மாநாட்டை புறக்கணிக்க போவதாக பாகிஸ்தான் ஏற்கனவே அறிவித்திருந்தது.இந்த முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்ட ஹிலாரி கிளிண்டனின் கோரிக்கையை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி(Yousaf Raza Gillani)நிராகரித்து விட்டார்.
பாகிஸ்தான் எல்லைச்சாவடி மீது நேட்டோ தாக்குதல் நடத்திய விவகாரத்தால், அமெரிக்கா - பாகிஸ்தான் உறவு தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இரு தரப்பிலும் இந்தச் சீர்குலைவை சரிக்கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி நேற்று முன்தினம்(3.12.2011) மாலை பாகிஸ்தான் பிரதமர் கிலானியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நேட்டோ தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.
அத்தாக்குதல் உள்நோக்கத்துடன் நிகழ்ந்ததல்ல எனக் குறிப்பிட்ட அவர், விசாரணை முடியும் வரை பாகிஸ்தான் பொறுத்திருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் கூறுகையில், பாகிஸ்தானின் இறையாண்மையை அமெரிக்கா மிக உயர்வாக மதிக்கிறது. இத்தாக்குதலால் இரு தரப்பு உறவு சீர்குலைய அனுமதிக்க மாட்டோம். இரு தரப்பும் ஒருமித்த நோக்கங்களை உடையவை எனவும் கூறினார்.
அத்துடன் ஜேர்மனியின் பான் நகரில் இன்று தொடங்க உள்ள ஆப்கான் எதிர்காலம் பற்றிய சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளும்படியும் அவர் கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்த கிலானி மாநாட்டை புறக்கணிப்பதாக அமைச்சரவை எடுத்த முடிவை நாடாளுமன்ற நிலைக் குழு ஏற்றுக்கொண்டதாகவும், அதனால் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். இத்தகவல்களை இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சலாலா எல்லைச்சாவடி மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் இராணுவம் அனுமதி அளித்த பின் தான் தாக்குதல் நிகழ்ந்தது என்ற அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைக்கு பாகிஸ்தான் இராணுவ அதிகாரி ஒருவர் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட இடத்தில் தலிபான்கள் ஒளிந்திருப்பதாகத் தான் நேட்டோ எங்களுக்கு முதலில் தகவல் தந்தது. அதன் அடிப்படையில் தான் பாகிஸ்தான் அனுமதியளித்தது. ஆனால் நள்ளிரவில் தாக்குதல் நடந்ததால் விடிந்த பின் தான் அது பாகிஸ்தான் எல்லைச்சாவடி என்பது தெரியவந்தது. அமெரிக்கா எங்களுக்கு தவறான தகவலை தந்ததால் தான் இது நடந்தது என தெரிவித்தார்.

0 கருத்துகள்: