தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.10.11

"முதல் பிளாஸ்டிக் ஜெட்" விமானம் பறந்தது


போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகவும் இலகுரக பயணிகள் விமானம், 787 ட்ரீம்லைனர், இன்று முதன் முறையாக பயணிகளுடன் விண்ணில் பறந்தது.
“உலகின் முதல் பிளாஸ்டிக் ஜெட்” என்று போயிங் நிறுவனத்தால்
வர்ணிக்கப்படும் இந்த விமானத்தின் கட்டுமானப் பொருட்களில் சுமார் அரைப்பகுதி , கார்பன் இழைகள் மற்றும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் , எரிபொருளை பயன்படுத்துவதில் மிகவும் சிக்கனமானது என்று கூறப்படுகிறது.
264 இருக்கைகள் மற்றும் இரண்டு இயந்திரங்கள் கொண்ட இந்த விமானம், ஜப்பான் விமான நிறுவனமான, ஆல் நிப்போன் ஏர்லைன்சினால், (ஏ.என்.ஏ) டோக்யோவிலிருந்து ஹாங்காங்குக்கு, இன்று இயக்கப்பட்டது.
இந்த முதல் பயணத்தில், ஆறு பிசினஸ் கிளாஸ் இருக்கைகளை , ஏ.என்.ஏ நிறுவனம் , ஏலத்தில் விற்றது. அதில் ஒரு இருக்கை, சாதாரணமாக பிசினஸ் கிளாஸ் இருக்கை விலையை விட 10 மடங்குக்கும் மேல் அதிகமான விலையில், அதாவது, சுமார் 34,000 டாலர்களுக்கு விற்கப்பட்டது.
இந்த ஏலத்தால் கிடைத்த தொகையை சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நன்கொடையாகத் தரப்போவதாக ஏ.என்.ஏ கூறியிருக்கிறது.
இந்த விமானத்தின் மற்ற டிக்கெட்டுகள் விற்கத் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன.
இந்த விமானத்தை பரீட்சார்த்த முறையில் பறக்கவிட்டதன் அடிப்படையில், அது 20 சதவீதம் குறைவான அளவில் எரிபொருளை பயன்படுத்தும் என்றும் தெரியவருகிறது.
ட்ரீம்லைனர்,அதே அளவு திறனுள்ள பிற ஜெட் விமானங்களை விட அதிக தூரம் பயணிக்கும் என்றும் கருதப்படுகிறது.
இந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களில், விமானம் தரையிறங்க உதவும் கீயர், எரிபொருள் அமைப்பு, சில இருக்கைகள் மற்றும் இயந்திரங்கள் உட்பட சுமார் கால் பகுதி பொருட்கள், பிரிட்டனில் தயாரிக்கப்பட்டவை.
மற்ற பொருட்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை. அமெரிக்கவில் தயாரிப்புப் பணிகள் பல்வேறு காரணங்களால் மூன்றாண்டுகள் தாமதமாயின.
இந்த விமானத்தில் ஜன்னல்கள் சற்று பெரிதாக இருக்கும், காற்றின் தரமும், உள்ளே வெளிச்சமும் மேம்பட்டதாக இருக்கும் என்று போயிங் கூறுகிறது.
இதற்கிடையே, பிரெஞ்சு விமான தயாரிப்பு நிறுவனமான, ஏர்பஸ்ஸும், இதே போன்ற ஒரு இலகு ரக விமானத்தை தயாரித்து வருகிறது. இதன் இறக்கையும் பிற வேறு பொருட்களும் பிரிட்டனில் தயாரிக்கபட்டுவருகின்றன. இந்த விமானம் அடுத்த ஆண்டு பரீட்சிக்கப்படும் என்று ஏர் பஸ் நம்புகிறது.

0 கருத்துகள்: