தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.8.11

அன்னா ஹஸாரேவுக்கு எதிராக சமூக ஆர்வலர்கள்


1
புதுடெல்லி:அருந்ததி ராய்,அருணாராய் ஆகியோரைத் தொடர்ந்து ஜனலோக்பால் மசோதாவிற்கான ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஏராளமான சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆட்களை தேர்வு செய்வது சங்க்பரிவாரம் என்றும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தாம் நிதியுதவி அளிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திரைப்பட தயாரிப்பாளர்
மகேஷ் பட்,அன்ஹத் தலைவர் ஷப்னம் ஆஸ்மி, தலித் தலைவர்களான உதித் ராஜ், ஆனந்த் டெல்தும்ப்ளே, பேராசிரியர் ராம் புன்யானி, ஆமிர் ரிஸ்வி, மஹாராஷ்ட்ரா சிறுபான்மை கமிஷன் துணைத் தலைவர் ஆப்ரஹாம் மத்தாயி ஆகியோர் நேற்று முன் தினம் ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மக்களின் தகவல் அறியும் உரிமைக்கான தேசிய பிரச்சார தலைவர் அருணாராய் கொண்டுவந்த லோக்பால் மசோதாதான் ஹஸாரேவின் ஜனலோக்பால் மசோதாவைவிட பலன் தரத்தக்கது என இவர்கள் தெரிவித்துள்ளனர்.
கார்ப்பரேட் துறையை சார்ந்தவர்கள் சிறைக்குள் சென்ற பிறகுதான் ஹஸாரே உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்புடன் களமிறங்கினார். அவருடைய ஜனலோக்பால் மசோதாவில் கார்ப்பரேட் துறையை உட்படுத்தவில்லை என ராம்புன்யானி தெரிவித்துள்ளார்.
கார்ப்பரேட்டுகள்தாம் நேரடியாகவும்,மறைமுகமாகவும் ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கின்றனர் என புன்யானி குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூறுகையில் ஒட்டுமொத்த சமூகத்தின் நலத்தில் விருப்பமில்லாத நவீன பொருளாதார ஒழுங்குமுறையின் தயாரிப்புகள்தாம் போராட்டத்தில் கலந்துக் கொள்கின்றார்கள் என தெரிவித்தார். கார்ப்பரேட்கள்தாம் போராட்டத்திற்கு பொருளாதார உதவி அளிக்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை எனவும்,அவர்கள் லோக்பால் வரம்பிற்குள் வரவில்லை எனவும் ஆப்ரஹாம் மத்தாயி தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ்ஸும்,பா.ஜ.கவும்தான் போராட்டத்திற்கு ஆட்களை ஏற்பாடுச் செய்கிறார்கள் என அன்ஹத் தலைவர் ஷப்னம் ஹாஸ்மி தெரிவித்தார்.
குஜராத் முதல்வர் மோடி குற்றவிசாரணை செய்யப்பட வாய்ப்புள்ளதால் புதியதொரு நபரை ஹஸாரே மூலம் தயார் செய்கிறார்கள் சங்க்பரிவார்கள் என ஹாஸ்மி கூறினார்.
பாதுகாவலர்கள் என சுயமாக பிரகடனப்படுத்தும் இவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என மகேஷ் பட் தெரிவித்துள்ளார். “நான் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு எதிரானவன் அல்லன். ஆனால், அப்போராட்டம் நடைமுறைக்கு சாத்தியமாக வேண்டும். ஜனநாயகத்தையும்,பாராளுமன்றத்தையும் மதிப்பு குறைத்து காண்பிக்கும் முறை ஆபத்தானது. முற்றிலும் பாசிசமயமாக்கப்பட்ட பிரிவினர்தாம் ஹஸாரேயை சுற்றிலும் இருக்கின்றனர்.” இவ்வாறு மகேஷ் பட் தெரிவித்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக பொதுசமூக உணர்வுகளை உருவாக்குவது நவீன தாராளமயமாக்கல் சீர்திருத்தவாதிகளின் நோக்கம் எனவும், நகரவாசிகளான மேல் ஜாதியினர்தாம் இதன் பின்னணியில் செயல்படுவதாகவும் தலித் ஆர்வலரும், எழுத்தாளருமான ஆனந்த் டெல்தும்ப்ளே தெரிவித்துள்ளார்.
தலித்துகளை ஒதுக்கிவிட்டு மேல்ஜாதியினர் நடத்தும் போராட்டத்தை ஆதரிக்க இயலாது என தெரிவித்த உதித்ராஜ், ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிராக இந்தியா கேட்டிலிருந்து பாராளுமன்றம் வரை பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

0 கருத்துகள்: