தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.8.11

இஸ்ரேலுடனான போர் நிறுத்தம் முடிந்தது: ஹமாஸ் அறிவிப்பு

காசா, ஆக. 21-   இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இதையடுத்து பாலஸ்தீனத்திலும் இஸ்ரேலிலும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்து விட்டது என்று பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவு இஸ்ஸல் தின் அல்-கசம் படையினர் காசா பகுதியில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தம்
முடிந்து விட்டது என்று கூறியுள்ளனர்.
"பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் படுகொலைகள் நியாயமற்றது, இதனால் இனிமேல் வாளாயிருக்க முடியாது" என்று அந்த படையின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபெய்தா தெரிவித்துள்ளார்.
இதனால் இஸ்ரேலின் குற்றங்களுக்கு எதிராக உடனடியாக காசா படை பதிலடி கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளது.
தெற்கு இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் தாக்குதலுக்கு 8 இஸ்ரேலியர்கள் பலியானதையடுத்து இஸ்ரேல் பதிலடி கொடுத்து நேற்று மத்திய காசாவில் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 3 அப்பாவி மக்கள் பலியாயினர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாயினர் இதில் 5 வயது சிறுவனும் பலியானதால் அங்கு கோபாவேசம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எகிப்தின் சினாய் பகுதியில் பாலஸ்தீனிய விடுதலை அமைப்பினருக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் எகிப்தைச் சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பாலஸ்தீன விடுதலை அமைப்பினரை தாக்க வந்த இஸ்ரேலிய ராணுவத்தினர் தங்கள் எல்லைக்குள் அத்துமீறிப் புகுந்ததாகவும், பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியப் படையினருக்கும் நடந்த சண்டையில் தங்கள் ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ள எகிப்து, இதற்காக இஸ்ரேல் மன்னிப்புக் கோரும் வரை அந்நாட்டுக்கான தங்களது தூதரை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

0 கருத்துகள்: