பாரிஸ்:முஅம்மர் கத்தாஃபியின் செல்வாக்கு மிகுந்த பகுதியான திரிபோலியில் அரசு எதிர்ப்பாளர்களுக்கு பிரான்சு ஆயுதங்களை வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. ராக்கெட் லாஞ்சர்கள், ஏவுகணை, ரைஃபிள் ஆகியன ஜபல் நஃபூஸா பகுதியில் பிரான்சு சப்ளை செய்வதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி லெ ஃபிகரோ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நேட்டோ நாடுகளுடன் ஆலோசனை நடத்தாமலேயே பிரான்சு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஆனால் பிரான்சு நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் இதுக்குறித்து பதிலளிக்கவில்லை. எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள யஃப்ரான், நாலூத் ஆகிய இடங்களின் வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரான்சு அதிபர் சர்கோஸியுடன் நேற்று முன் தினம் பேச்சுவார்த்தை நடத்திய எதிர்ப்பாளர்களின் தலைவர் மஹ்மூத் ஜிப்ரீல் ராணுவ உதவியை கோரவில்லை என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே த்வரகா நகரத்தில் நேட்டோ போர்விமானம் நடத்திய தாக்குதலில் எட்டு சாதாரணமக்கள் கொல்லப்பட்டனர்.சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக