தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.7.11

லஞ்சமா? 9840983832 என்ற செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்

லஞ்சம் வாங்கும் போலீசார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், 9840983832 என்ற செல்போன் எண்ணில் பேசி தகவல் தெரிவிக்கும் திட்டம் சென்னை போலீசில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
 
இது போன்ற திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த பொதுமக்கள் டி.ஜி.பி.க்கும் வேண்டுகோள் வைத்துள்ளனர். சென்னை வேப்பேரி பகுதியில் திருமண ஊர்வலத்தை மறித்து லஞ்சம் வாங்கிய சப்- இன்ஸ்பெக்டர் பற்றி தினத்தந்தி படத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தது.
 
இந்த செய்தியை படித்து பார்த்த சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதி உடனடியாக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். நடுரோட்டில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட லஞ்ச சப்- இன்ஸ்பெக்டர் தர்மராஜை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
 
அதோடு இதுபோல் லஞ்ச வேட்டை நடத்தும் போலீசார் பற்றி தகவல் தெரிவிக்க 9840983832 என்ற செல்போன் நம்பரையும் வெளியிட்டு, அந்த நம்பரில் பேசி லஞ்சம் தொடர்பாக தகவல் தெரிவிக்கலாம் அல்லது எஸ்.எம்.எஸ். மூலமும் புகார் கொடுக்கலாம் என்றும், அந்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கமிஷனர் திரிபாதி அறிவிப்பு வெளியிட்டார்.
 
இந்த அறிவிப்பு பற்றிய செய்தியையும் தினத்தந்தி செய்தியாக வெளியிட்டது. இந்த செய்தியை தினத்தந்தியில் படித்து பார்த்த பொது மக்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து, சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதிக்கு பாராட்டு மழை பொழிந்து தகவல்களை அனுப்பிய வண்ணம் உள்ளனர்.
 
இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போன் மூலம் வரும் தகவல்களை பதிவு செய்ய 4 பெண் போலீசார் ஷிப்டு முறையில் பணியில் உள்ளனர். அவர்களால் தமிழகம் முழுவதும் இருந்து இது தொடர்பாக, பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல்களை பதிவு செய்ய முடியாமல் திணறும் நிலை உள்ளது. அவர்கள் பாத்ரூம் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
 
அந்த அளவுக்கு மக்களிடம் இருந்து, இடைவிடாமல் தொடர்ச்சியாக பாராட்டு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது என்று தெரிவித்தார். பாராட்டு தெரிவிக்கும் பொது மக்கள் அனைவரும், இது போல் லஞ்ச போலீசார் பற்றி செல்போன் மூலம் புகார் தெரிவிக்கும் திட்டத்தை, சென்னையைப் போல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.ராமானுஜத்திற்கும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
 
பொதுமக்கள் அனுப்பி உள்ள இந்த தகவல்கள் டி.ஜி.பி அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று சென்னை போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. டி.ஜி.பி.ராமானுஜம் தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்: