தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.6.11

கனிமொழி ஜாமீன் மனு விசாரணை 20-ந்தேதிக்கு தள்ளிவைப்பு


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் குற்றம் சாற்றப்பட்டுள்ள டி.பி.ரியால்டி நிறுவனத்திடமிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு கொடுக்கப்பட்ட ரூ.200 கோடி பணத்தின் நிலை என்ன என்று விளக்குமாறு மத்திய புலனாய்வுக் கழகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில்
கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கைமாறியது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கலைஞர் டி.வி. பங்குதாரர் கனிமொழி, நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரை கடந்த மே மாதம் 20-ந்தேதி சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்திலும், தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டன. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இருக்கிறது. அவர் கலைஞர் டி.வி.யில் முக்கிய பங்குதாரராக செயல்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் பின்னணி உள்ளது. அவரை ஜாமீனில் விட்டால் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.


இதையடுத்து கனிமொழியும், சரத்குமாரும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். கடந்த 10-ந்தேதி இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 13-ந்தேதி (இன்று) மனுக்கள் விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி, சரத்குமார் ஆகியோரது ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி இதற்கு ஒரு வாரத்தில் சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும் ஆ.ராசா மத்திய மந்திரியாக இருந்தபோது 13 டெலிகாம் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட இழப்பீடு குறித்தும், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கைமாறியதில் என்ன நடந்தது என்ற விவரத்தை நீதிமன்றத்துக்கு தெரிவிக்குமாறும் சி.பி.ஐ.க்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணையை 20-ந்தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதி அறிவித்தார். அன்று சி.பி.ஐ. சார்பில் பதில் மனு தாக்கல் செய்த பிறகு கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது தெரியவரும். கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 25 நாட்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: