தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.3.11

லிபியாவின் எண்ணெய் வளத்துக்காகதான் அமெரிக்கா தாக்குதல்: ஈரான் மதத்தலைவர்


டெக்ரான், மார்ச். 23- தாக்குதல்களில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக லிபியா மீது தாக்குதல் நடத்துவதாக கூறிக்கொண்டு அமெரிக்கா லிபியா விவகாரத்தில் தலையிட்டு உள்ளதற்கு காரணம் லிபியாவின் எண்ணெய் வளம் தான் என்று ஈரான் மதத்தலைவர் அயதுல்லா அலி காமேனி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
புனித நகரான மஷாத்தில் இருந்து காமேனி ரேடியோவில் பேசினார். அப்போது
அவர் கூறியதாவது:-
மக்களுக்கு எதிராக லிபியா அரசு நடத்தி வரும் தாக்குதலை ஈரான் கண்டிக்கிறது. மக்களை கொல்வதற்காக நகரங்கள் மீது லிபியா ராணுவம் குண்டுமழை பொழிகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. கண்டிக்கத்தக்கது.
ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானத்தின் பேரில் இங்கிலாந்தும், பிரான்சும் கடந்த சனிக்கிழமை அன்று லிபியா மீது தாக்குதல்களை நடத்தின. அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் லிபியா மக்களை காப்பாற்றுவதற்காக அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுத்து இருப்பதாக கூறி உள்ளன. அவர்கள் மக்களை காப்பாற்ற லிபியா வரவில்லை. லிபியாவின் எண்ணெய் வளத்துக்காகவே லிபியாவுக்கு வந்து இருக்கிறார்கள்.
கடாபிக்கு எதிராக போராடும் மக்களை ஈரான் ஆதரிக்கிறது. ஆனால் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் லிபியாவில் தலையிடுவதற்கு உண்மையான காரணம் வேறு. அவர்களுக்கு லிபியாவின் எண்ணெய் வளம் வேண்டும். அதோடு எகிப்திலும் துனிசியாவிலும் நடப்பவற்றை கண்காணிக்க வட ஆப்பிரிக்காவில் இடம் வேண்டும். இதற்கான களமாக லிபியாவை அந்த நாடுகள் பார்க்கின்றன.
ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. போராடுபவர்கள் சியாவா? சன்னியா என்ற பேதம் எல்லாம் பார்க்காமல் அனைத்து கிளர்ச்சிகளையும் அனைத்து மக்கள் இயக்கத்தையும் ஈரான் ஆதரிக்கிறது. நாங்கள் பாலஸ்தீன் பிரச்சினைக்கு கடந்த 32 ஆண்டுகளாக ஆதரவு தெரிவித்து வருகிறோம். பாலஸ்தீனியர்கள் சியா முஸ்லிம்கள் அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் கிளர்ச்சியாக தான் பாலஸ்தீன பிரசினையை நாங்கள் பார்க்கிறோம்.
லிபியாவில் கிளர்ச்சியை ஆதரிக்கும் அமெரிக்கா, பக்ரைனில் கிளர்ச்சியை எதிர்க்கிறது. ஏனெனில் பக்ரைன் நாட்டில் அமெரிக்காவின் போர்க்கப்பலை நிறுத்த அந்த நாடு அனுமதி அளித்து உள்ளது. இப்படி அமெரிக்கா பாரபட்சமாக நடந்து கொள்கிறது. இவ்வாறு காமேனி பேசினார்.
இந்நிலையில் லிபியா மீது அமெரிக்க கூட்டு படைகள் தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகரம் திரிபோலியில் உள்ள கடாபி மாளிகை மீது நேற்று இரவு மீண்டும் குண்டு வீசப்பட்டன. ஏவுகணையை வீசி மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மாளிகையின் இன்னொரு பக்க சுவர் இடிந்து விழுந்தது.

0 கருத்துகள்: