லாகூர், மார்ச். 5- பாகிஸ்தானில் இஸ்லாமின் முன்னுரிமையைக் குறைக்கும் மத துவேசச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி வந்த, அந்நாட்டு அமைச்சர் சபாஸ் பட்டி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிறிஸ்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இஸ்லாமியர் தவிர மற்றவர் உரிமைகளைக் காக்க
வலியுறுத்தி வந்த, அமைச்சர் சபாஸ் பட்டி கடந்த புதன்கிழமை கொல்லப்பட்டார். தலிபான் தீவிரவாதிகள் சபாஸ் பட்டியை கொன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த இரு மாதங்களில் இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி வந்த, பஞ்சாப் கவர்னர் சல்மான் தசீர் மற்றும் அமைச்சர் பட்டி கொல்லப்பட்டுள்ளனர். வாபாஸ் பட்டி கிறிஸ்துவர், மைனாரிடி சார்பில் அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே அமைச்சர் பட்டி. இவரை கொன்றதற்கு பாகிஸ்தான் கிறிஸ்துவர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.லாகூர், பைசலாபாத், சர்கோதா, முல்தான், ஐதராபாத் ஆகிய இடங்களில் இரண்டாவது நாளாக, தொடர்ந்து பட்டி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லாகூரில் நேற்று முன்தினம் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதி கேட்டு போராடினர். பஞ்சாப்பில் உள்ள கோஜ்ரா என்ற இடத்தில் பெரிய அளவில் கிறிஸ்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக, கிறிஸ்துவர்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்ந்தாலும், தற்போது தான் தெருவுக்கு வந்து பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி நீதி கேட்டுள்ளனர். அமைச்சர் பட்டி கொல்லப்பட்டதற்கு மேற்கத்திய பத்திரிகைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் பாகிஸ்தான் பார்லிமென்டில் இந்தப் படுகொலை பற்றி ஒரு வார்த்தை கூட யாரும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்லப்பட்ட அமைச்சர் சபாஸ் பட்டியின் உடலுக்கு, நேற்று இஸ்லாமாபாத்தில் உள்ள பாத்திமா சர்ச்சில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. இதில், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி, அமைச்சர்கள், அமெரிக்க தூதர், பிரிட்டன் உயர் கமிசனர் உட்பட பல நாட்டு தூதர்கள் கலந்து கொண்டனர். பயங்கர பாதுகாப்புடன் நடத்தப்பட்ட சடங்கின் போது பிரதமர் யூசுப் அமைதியுடன் காணப்பட்டார். சர்ச்சுக்கு வெளியே கூடி இருந்த கிறிஸ்துவர்கள் பட்டியின் கொலையை கண்டித்தனர். கொலைக்கு காரணமானவர்களை விரைவில் கைது செய்யவும், அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் கிறிஸ்துவ சமூக உறுப்பினர்களை கேட்டு கொண்டனர். பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் உள்ள, பட்டியின் சொந்த கிராமமான குக்பூரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக