நியூயார்க்:"ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் ஒபாமா நிர்வாகம், ரகசிய பேச்சுவார்த்தையைத் துவக்கி விட்டது. அரசியல் தீர்வு ஒன்றே ஆப்கன் பிரச்னையைத் தீர்க்கும் என்று ஹிலாரி கூறியுள்ளார்' என, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் "நியூயார்க்கர்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
கடந்த வார இறுதியில், ஆசியா சொசைட்டியில் இதுகுறித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன்,"தலிபான்கள், வன்முறையைக் கைவிட்டு சமூகத்துடன் இணைந்து வாழ வேண்டும். மீண்டும் அல் - குவைதாவுடன் இணைந்தால், அவர்கள் உலக எதிரியாவர்; நம்மை அவர்களால் விரட்ட முடியாது. அரசியல் தீர்வு ஒன்று தான் இப்பிரச்னைக்கு வழிவகுக்கும்' என்று தெரிவித்ததாக, அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.ஹிலாரிக்குக் கடிதம்: இதற்கிடையில், அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாண குடியரசுக் கட்சி எம்.பி., ஜிம் வெப், வெளியுறவு அமைச்சர் ஹிலாரி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கிப்ஸ் இருவருக்கும் எழுதியுள்ள கடிதம் ஒன்றில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவி, அதன் அணு ஆயுத தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று ஒபாமா நிர்வாகம் உறுதியளிக்க வேண்டும் என்றும், அதற்கான மசோதா ஒன்றை பார்லிமென்ட்டில் கொண்டு வரப்போவதாகவும் கூறியுள்ளார்.
இந்தியா - பாக்., பேச்சுவார்த்தை: மும்பை தாக்குதலுக்குப் பின் நின்று போன இந்திய - பாக்., பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவதாக இருநாடுகளும் எடுத்துள்ள முடிவை வரவேற்றுள்ள ஹிலாரி, இரு நாடுகளும் ஆப்கன் அரசியல் முன்னேற்றத்துக்கு ஆதரவளித்து, ஆப்கனின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், ஆப்கனின் எல்லையில் எவ்வித பிரச்னையிலும் ஈடுபடக் கூடாது என ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நன்றி: தினமலர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக