தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.2.11

ஈரானுடன் சிறீலங்கா அரசு நெருக்கம் - அமெரிக்கா எச்சரிக்கை – விக்கிலீக்ஸ் தகவல்

சிறீலங்கா அரசு  சர்ச்சைக்குரிய ஈரானிய அரசு டன் நெருங்கிய உறவு பேணி வந்தமைக்கு அமெரிக்கா சிறீலங்காவிற்கு எச்சரிக்கை செய்திருப்பதாக, விக்கலீக்ஸ் இணையத்தளம் வெளிப்படுத்தியுள்ள  தகவல்களை  ஆதாரம் காட்டி, த ரெலிகிறாஃப் (The Telegraph) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக விக்கிலீஸ் இணையம் வெளியிட்டுள்ள தகவலில், 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் நாள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட விபரங்களில், சிறீலங்காவிற்கான அமெரிக்க தூதருக்கும் சிறீலங்காவின் அப்போதைய வெளிவிவகாரச் செயலர் பாலித கோஹென மற்றும் மத்திய வைப்பகத்தின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருடன் இடம்பெற்ற தனித்தனியான சந்திப்புக்களின் உரையாடல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஈரானுடன் நெருங்கிய வர்த்தக உறவைப் பேணுவது மற்றும் ஆயுதக் கொள்வனை மேற்கொள்ள இருப்பது பற்றியும், அவ்வாறு ஆயுதக் கொள்வனவு இடம்பெற்றால் அது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானம் 1747ஐ மீறுவதாக அமையும் எனவும், அமெரிக்க - இலங்கை உறவில் பாரிய எதிர்விளைவைத் தோற்றுவிக்கும் என்றும், அமெரிக்க தூதுவரும், துதரக அதிகாரியும் பாலித கோஹென, அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு எச்சரிக்கை செய்தனர்.

இதனை மறுத்த அவர்கள் இருவரும் ஈரானிடம் தமது அரசாங்கம் ஆயுதக் கொள்வனவை மேற்கொள்ள எத்தனிக்கவில்லை எனத் தெரிவித்தனர். அதுமட்டுமன்றி 2007ஆம் ஆண்டு நவம்பரில் அரச அதிபர் மகிந்த ராஜகப்ச ஈரானிற்கு மேற்கொள்ள இருக்கும் பயணம் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டது எனவும் அவர்கள் இருவரும் பதலளித்துள்ளனர்.

ஆனால் சிறீலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தூதரக அதிகாரி ஒருவருக்கு கூறிய இரகசிய தகவலின் அடிப்படையில் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எண்ணையை சந்தை விலையைவிடக் குறைவான விலைவில் ஈரானிடம் இருந்து கொள்வனவு செய்யவும், முக்கிய ஆயுதங்களை ஈரானிடம் கொள்வனவு செய்யவுமே மகிந்த ராஜபக்சவின் பயணம் அமைவது மட்டுமன்றி, இதன் ஊடாக அமெரிக்காவிற்கு ஒரு செய்தியையும் சொல்ல மகிந்த அரசாங்கம் நினைக்கின்றது என சமரசிங்க கூறியிருக்கின்றார்.

ஈரானின் அணுவாயுதத்திட்டம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுடான தொடர்புகளைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் அதன் மீது தடைகளை விதித்திருந்த காலத்தில் மகிந்த ராஜபக்சவின் பயணம் அமைவது வொசிங்கரனை எதிர்மறையான நிலைப்பாட்டுக்கு தள்ளும் என தூதரக அதிகாரிகள் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர். ஈரானுடன் மேலதிக வர்த்தக உறவுகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும், அவதானமாகச் செயற்படுமாறும் நட்பு ரீதியாக சிறீலங்காவிற்கு இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Financial Action Task Force (FATF) அமைப்பு ஈரானின் நிதிக் கையாளுகை பற்றி அண்மையில் வெளியிட்ட அறிக்கை மற்றும் பயங்கரவாத அமைப்புகளிற்கான ஈரானின் இரகசிய நிதி வழங்கல் பற்றி எச்சரிக்கை செய்த அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஈரானுடனான நிதி மற்றும் வைப்பக உறவுகள் பற்றியும் எச்சரிக்கை செய்திருக்கின்றனர்.

இந்த விடயங்கள் தொடர்பாக அரச அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரியப்படுத்துவதாக இவர்கள் இருவரும் தனித்தனியாக உறுதியளித்துச் சென்றிருப்பதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்துள்ள இரகசியத் தகவல் மேலும் தெரிவிக்கின்றது.
ஈரான் தமது தேயிலையைக் கொள்வனவு செய்யும் முக்கிய நாடு என்பதால், அதனுடனான தமது வர்த்தக உறவு தொடரும் எனவும், தனக்குத் தெரிந்தளவில் அந்த நாட்டிடம் ஆயுதம் வாங்கும் எண்ணம் தமது அரசாங்கத்திற்கு இல்லை எனவும் கோஹொன இதன்போது பதிலளித்திருப்பதாகவும் விக்கலீக்ஸ் வெளியிட்ட தகவலில் மேலும் கூறப்பட்டுள்ளது

0 கருத்துகள்: