தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.1.11

அயோத்தி - சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி புத்த அமைப்பும் வழக்கு!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் எங்களுக்கே சொந்தம் என்று புத்த அமைப்பு ஒன்றும் உரிமை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தில் ராமர் பிறந்ததாகவும், அங்கிருந்த கோவிலை இடித்து விட்டு மசூதியை முகலாய மன்னர் பாபர் கட்டியதாகவும் இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்த நிலத்துக்கு உரிமை கோரி நடந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. அதன்படி, அந்த இடத்தை மூன்றாகப் பிரித்து இரண்டு இந்து அமைப்புகள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்கு தலா ஒரு பங்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகளும் முஸ்லிம் அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த நிலையில், சர்ச்சைக்குரிய இடத்துக்கு புத்த மதத்தினரும் உரிமை கொண்டாடத் தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. கூட்டமைப்பு மற்றும் புத்த கல்வி அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவர் உதித் ராஜ் டில்லியில்  வெள்ளிக் கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசும் போது கூறினார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:

அயோத்தி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து இந்தியாவில் உள்ள புத்த மதத்தினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அது சர்ச்சைக்குரிய நிலம் மட்டுமல்ல. மசூதி கட்டுவதற்கு முன்பாக, அந்த இடத்தில் புத்த விகாரம் இருந்துள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 2003ஆம் ஆண்டு தாக்கலான தொல்லியல் ஆய்வறிக்கையிலும் இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தில் வட்ட வடிவிலான வழிபாட்டு தலம் இருந்ததாக கூறப்பட்டது. அது, நிச்சயமாக புத்த விகாரமாகத்தான் (புத்தர் கோவில்) இருக்க வேண்டும். மேலும், தூண்களால் கட்டப்பட்ட வழிபாட்டு தலமாக இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டது. வட இந்தியாவை பொருத்தவரை கோவில் என்றால் இந்துக்கள் கோவில் மட்டுமல்ல. இந்துக்கள், ஜைனர்கள், புத்த மதத்தினர் என அனைவருமே கோவில் என்றே கூறுவது வழக்கம். எனவே, இந்து கோவில் என முடிவு செய்வது தவறு.

இவ்வாறு உதித் ராஜ் தெரிவித்தார். அப்போது உடன் இருந்து மத்திய முன்னாள் அமைச்சரும் பாரதீய ஜனசக்தி தலைவருமான சங்பிரியா கவுதம் கூறியதாவது:-

சர்ச்சைக்குரிய இடத்தில் கசவ்தி வகை தூண்கள் இருந்ததாக அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சுதிர் அகர்வால் தெரிவித்துள்ளார். காசியில் உள்ள புத்த விகாரத்திலும் அது போன்ற தூண்களே இருக்கின்றன. இதுபோல, மசூதியை கட்டுவதற்கு அந்த இடத்தில் இருந்த கசவ்தி வகை தூண்கள் பயன்படுத்தப்பட்டதாக ஆங்கிலேயே கட்டிட நிபுணர் கார்னஜியை மேற்கோள் காட்டி, மற்றொரு நீதிபதி எஸ்.யு.கான் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்ச்சைக்குரிய அந்த இடத்தை சுற்றிலும் சில புத்த விகாரங்கள் அழிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டு இருக்கிறது. மசூதியை கட்டுவதற்கு அதில் இருந்த பாகங்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன. எனவே, அந்த இடம் புத்த மதத்தினருக்கு சொந்தமானது.

இவ்வாறு சங்பிரியா தெரிவித்தார்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு இந்த சர்ச்சையை இரு தரப்பினரும் முடிவுக்கு கொண்டு வந்தால் நாங்கள் எதுவும் செய்திருக்க மாட்டோம். நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, உண்மையான உரிமையாளரான நாங்கள் அமைதியாக இருந்திருப்போம். தற்போது, இரண்டு தரப்பினருமே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். எனவே, உண்மையான உரிமையாளரான நாங்கள் ஏன் அமைதி காக்க வேண்டும்? எனவே, வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

0 கருத்துகள்: