தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.12.10

ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல்

சென்னை : அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் திட்டம் தோல்வியில் முடிந்ததற்கான காரணம் தொடர்பாக, இஸ்ரோவின் மூன்று பிரிவுகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்திய விண்வெளி ஆய்வு மையம்(இஸ்ரோ), கடந்த 25ம் தேதி ஜி.எஸ்.எல்.வி., - எப்06 ராக்கெட் மூலம் ஜிசாட் - 5பி தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. பூமியிலிருந்து புறப்பட்ட சில வினாடிகளில், ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது. நிருபர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், ""ராக்கெட்டில் உள்ள கம்ப்யூட்டரிலிருந்து ராக்கெட்டின் முதல் பகுதிக்கு கட்டளை சிக்னல்களை எடுத்துச் செல்லும் கேபிள் திடீரென அறுந்தது. இதனால், ராக்கெட்டிற்கு கட்டளைகளை அனுப்ப முடியவில்லை. கட்டுப்பாட்டை இழந்த ராக்கெட், நிர்ணயிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றதால், ராக்கெட் வெடிக்க வைக்கப்பட்டது,'' என்றார். இஸ்ரோ வழக்கமாக வெளியிடும் பத்திரிகை செய்திக்குறிப்பில், தோல்வி குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. "ஜி.எஸ்.எல்.வி., - எப்06/ஜிசாட் - 5பி திட்டம் வெற்றி பெறவில்லை' என, மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ""என்ன நடந்தது, எப்போது நடந்தது என்பது எங்களுக்கு தெரியும். ஏன் நடந்தது என்பது குறித்து அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்து வருகிறோம்,'' என்றார்.


ராக்கெட்டின் இரண்டாம் பகுதிக்கும், மூன்றாம் பகுதிக்கும் இடையேயான இணைப்பு துண்டிக்கப்பட்டதால், ராக்கெட் தோல்வியடைந்திருக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இதை மறுத்துள்ள இஸ்ரோ செய்தித் தொடர்பாளர், "ஓரிரு நாட்களில் தோல்விக்கான காரணத்தை இஸ்ரோ வெளியிடும்' என்றார். இத்திட்டத்தில் இணைந்து செயல்பட்ட இஸ்ரோவின் அங்கங்களான, பெங்களூரு இஸ்ரோ செயற்கைக்கோள் மையம்(ஐ.எஸ்.ஏ.சி.,), திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்(வி.எஸ்.எஸ்.சி.,), ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையம் (எஸ்.எச்.ஏ.ஆர்.,) ஆகிய மூன்று பிரிவினரும் தோல்விக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர் என, கூறப்படுகிறது. செயற்கைக்கோளால் பிரச்னையா, ராக்கெட் வடிவமைப்பு, உற்பத்தியில் பிரச்னையா, ராக்கெட் ஒருங்கிணைப்பில் பிரச்னையா என, விவாதம் நடந்து வருகிறது. செயற்கைக்கோளை உருவாக்கிய ஐ.எஸ்.ஏ.சி.,யில் பிரச்னை ஏற்பட்டதா, ராக்கெட் வடிவமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்ட வி.எஸ்.எஸ்.சி.,யில் பிரச்னை ஏற்பட்டதா, ராக்கெட் ஒருங்கிணைக்கப்பட்ட எஸ்.எச்.ஏ.ஆர்.,ல் பிரச்னை ஏற்பட்டதா என, விசாரணை நடந்து வருகிறது.


"விஞ்ஞானிகள் ஆரம்பம் முதலே நம்பிக்கையில்லாமல் இருந்தனர்' என, ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார். அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை ஏவுவதற்கு ஏற்ற ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் மூன்றாம் பகுதியின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென ரஷ்ய விஞ்ஞானிகள் குழு வந்து, மூன்றாம் பகுதியின் திறனை அதிகரிப்பதில் உதவியுள்ளது. தோல்வியில் முடிந்த ஜிசாட் - 5பி செயற்கைக்கோள் தான், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் இதுவரை எடுத்துச் சென்ற செயற்கைக்கோள்களில் எடை அதிகமானவை. ஜிசாட் - 5பி-யானது 2,310 கிலோ எடை கொண்டது. இது 2007ல் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட இன்சாட் - 4சி.ஆர்., செயற்கைக்கோளை விட 180 கிலோ, 2003ல் ஏவப்பட்ட எஜுசாட் செயற்கைக்கோளை விட 400 கிலோ, 2001ல் ஏவப்பட்ட ஜிசாட் - 1 செயற்கைக்கோளை விட 800 கிலோ அதிக எடை கொண்டது. அதிக எடையின் காரணமாக ஏற்பட்ட நிலையற்ற தன்மையே, ராக்கெட்டின் தோல்விக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. "கேபிள் இணைப்புகள் அவ்வளவு எளிதாக அறுந்துபோகாது. கேபிள் இணைப்புகள் அந்த அளவிற்கு திடமாக பொருத்தப்பட்டிருக்கும். ராக்கெட்டே உடைந்தால் மட்டுமே கேபிள் இணைப்புகள் அறுபடும்' என, விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார். சோதனை மற்றும் மறுசோதனை மூலமாக மட்டுமே எதிர்காலத்தில் தோல்விகளை தவிர்க்க முடியும் என மற்றொரு விஞ்ஞானி தெரிவித்தார்

0 கருத்துகள்: