தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.11.10

அமைதிப் பேரணியினர்மீது இஸ்ரேலின் அடாவடித் தாக்குதல்

மேற்குக் கரையைச் சேர்ந்த கிராமமொன்றில் தமக்குச் சொந்தமான நிலத்தைப் பலவந்தமாக அபகரித்து, அதைச் சூழ இஸ்ரேலிய பிரிவினைச் சுவரைக் கட்டியுள்ள இஸ்ரேலின் அத்துமீறலை எதிர்த்து அமைதிப் பேரணியில் கலந்துகொண்ட பலஸ்தீன் பொதுமக்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் அடாவடித் தாக்குதல் நடாத்தியதில் பலர் படுகாயமுற்றனர்.


கடந்த வெள்ளிக்கிழமை (05.11.2010) அதிகாலையில் நபி ஸாலிஹ் கிராமத்தைத் திடீரென சுற்றிவளைத்துக் கொண்ட ஆக்கிரமிப்புப் படையினர், பலஸ்தீன் மக்களின் வீடுகளை நோக்கி சரமாரியான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் தமக்கு இழைக்கப்பட்டு வரும் அட்டூழியங்களுக்கு சாத்வீகமான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மக்களை ஒருங்கிணைத்து வரும் பலஸ்தீன் செயற்பாட்டாளர்களான பாஸிம், முகம்மது தமீமி ஆகிய இருவரின் வீடுகளும் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. வெள்ளிக்கிழமை தோறும் இடம்பெறும் இஸ்ரேலிய பிரிவினைச் சுவருக்கு எதிரான அமைதிப் பேரணியில் கலந்துகொள்ளும் பட்சத்தில் அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், இந்த அச்சுறுத்தல்களை எல்லாம் மீறி வழமை போலவே குறிப்பிட்ட நேரத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ள பலஸ்தீன் நிலப்பகுதியில் ஒன்று திரண்டனர். அவர்களை அங்கிருந்து கலைக்குமுகமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளையும் கைக்குண்டுகளையும் எறிந்ததோடு, துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டனர்.

இத் தாக்குதல் சம்பவத்தின்போது மூன்று பலஸ்தீனர்கள் படுகாயமுற்றதோடு மற்றும் பலர் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டனர். இதேவேளை, கண்ணீர்ப் புகைக்குண்டு வந்து விழுந்ததில் அமெரிக்கப் பிரஜையான பெண் செயற்பாட்டாளர் ஒருவரும், 16 வயதுப் பலஸ்தீன் சிறுவன் ஒருவனும் படுகாயமுற்றுள்ளனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை பலஸ்தீன் வீடுகள்மீது மேற்கொண்ட குண்டுவீச்சுக்களின் விளைவாக வீட்டுக்குள் இருந்த 21 வயதான பலஸ்தீன் பெண்மணி ஒருவர் படுகாயமுற்று மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் இடம்பெற்ற எதிர்ப்புப் பேரணி, முன்னாள் பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் ஜேம்ஸ் பெல்ஃபர், லோர்ட் ரொத்சைல்ட் அவர்களுக்கு 'பலஸ்தீனம் யூதர்களின் தாயகம்' என்பதைத் தாம் முழுமனதோடு அங்கீகரிப்பதாய் பகிரங்கமாகத் தெரிவித்து உத்தியோகபூர்வ மடலொன்று அனுப்பியதன் மூலம் 1917 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பெல்ஃபர் பிரகடனத்தின் 93 ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூர்வதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி கிராமத்தில் அமைதிப் பேரணியினர்மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களால் ஊடகவியலாளர்களும், உள்ளூர் புகைப்படப்பிடிப்பாளர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். பலஸ்தீன் பொதுமக்களின் நியாயமானதும் சாத்வீகமானதுமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதைக் கைவிட்டு, நபி ஸாலிஹ் கிராமத்திலிருந்து விட்டு வெகுவிரைவில் வெளியேற வேண்டும் என்று ஊடகவியலாளர்களுக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் பெரும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்: