தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.10.10

அரசு வங்கிகளா? ஆர்.எஸ்.எஸ்.-இன் காலாட்படையா?

முஸ்லீம் விரோத அரசு வங்கிகள்

அரசு வங்கிகளா? ஆர்.எஸ்.எஸ்.-இன் காலாட்படையா?

நீங்கள் குடியிருக்கும் பகுதியை அபாயகரமான பகுதி என்று அறிவித்து, அங்கே வசிப்பவர்கள் யாரும் வங்கிக் கணக்கு தொடங்க முடியாதென்று சொன்னால் நீங்கள் சகித்துக் கொள்வீர்களா? மதச்சார்பற்ற குடியரசு என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்தியாவில் அரசு வங்கிகள் முஸ்லீம்களுக்கு எதிராக இத்தகைய புறக்கணிப்பை அமலாக்கி வருகின்றன.

கல்வி உதவித் தொகை பெறும் பொருட்டு சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு விண்ணப்பித்த 90,000 முஸ்லீம் மாணவர்களுடைய விண்ணப்பங்கள் ஆந்திராவில் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. பீஹாரில் வங்கிகள் மறுத்ததால் 50,000க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவர்கள் அரசின் உதவித் தொகையை இழந்துள்ளனர். அஸ்ஸாம், மேற்கு வங்கம், உ.பி., கர்நாடகா என நாடு முழுவதிலும் முஸ்லீம் மாணவர்கள் இதே நிலைக்கு ஆளாகியுள்ளனர். அரசு வங்கிகளில் கடன் பெறுவது மட்டுமின்றி கணக்குத் தொடங்குவதும்கூட முஸ்லீம்களுக்கு இயலாததாகிவிட்டது என்ற புகாரை தேசிய சிறுபான்மை கமிசன் விசாரிக்கப் புகுந்தபோதுதான், முஸ்லீம்கள் வாழும் பகுதிகள் பலவற்றை “அபாயகரமான பகுதிகள்” (Red Zones) என்று அரசு வங்கிகளே ஒதுக்கி வைத்திருக்கின்றன என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலமானது.

நகரங்களில் மற்ற பிரிவினருடன் கலந்து வாழமுடியாமல் ஒதுக்கப்படுவதனால்தான் தலித் மக்களும் முஸ்லீம்களும் குறிப்பிட்ட சில பகுதிகளில் கூடி வாழும்படி நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். வர்க்கரீதியிலும் இவர்கள்தான் நாட்டின் ஏழ்மையான பிரிவினர். “ஏழ்மையான பகுதிகளில் கடனை வசூலிப்பது சிரமம் என்பதனால்தான் இவ்வாறு வகைப்படுத்துகிறோம், இதில் மதத்துவேசம் இல்லை” என்று தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றன வங்கிகள். கடன் கொடுப்பது இருக்கட்டும், மாணவர்களின் உதவித் தொகையை வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்வதில் என்ன அபாயம்? ஏழ்மைக்கு நிவாரணமாக கல்வி உதவித்தொகை! வங்கிச் சேவையை மறுப்பதற்குக் காரணம்- அதே ஏழ்மை!

தேசிய சிறுபான்மை கமிசன் ஜூலை 28 அன்று அரசு வங்கிகளுக்கு அனுப்பிய கடிதத்தில், ரிசர்வ் வங்கிச் சுற்றறிக்கையின்படி பின்தங்கிய சமூகப் பிரிவினருக்கு எளிய முறையில் சேமிப்புக் கணக்குகளை உருவாக்கித் தரவேண்டுமென வலியுறுத்தியது. ஆயினும், ரிசர்வ் வங்கியிடமிருந்து அவ்வாறு எந்த சுற்றறிக்கையும் வரவில்லையென்று முஸ்லீம் மாணவர்களிடம் புளுகியிருக்கின்றனர், வங்கி அதிகாரிகள்.

சரியான வேலை வாய்ப்புகளோ, தரமான கல்வியோ கிடைக்காததனால், தலித் மக்களைப் போலவே சமூகத்தின் மிகப் பின்தங்கிய நிலையில்தான் பெரும்பான்மை முஸ்லீம்கள் உள்ளனர் என்கிறது, சச்சார் கமிட்டி அறிக்கை. அரசு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, சிறு வணிகம் அல்லது சுயதொழில் செய்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள முஸ்லீம் மக்களுக்கு சிறு கடன்களும், வங்கிச் சேவைகளும் அத்தியாவசியமானவை. வங்கிச் சேவைகளை மறுப்பதென்பது அவர்களை வாழவிடாமல் செய்வதாகும். இதனை ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்துகின்றன. நாடு முழுவதிலும் முஸ்லீம்களின் சேமிப்புக் கணக்கு எண்ணிக்கை இந்த வருடம் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. முஸ்லீம்களின் வங்கிக் கணக்குகள் அஸ்ஸாமில் 47%மும், கர்நாடகாவில் 46.2%மும், மேற்கு வங்கத்தில் 17.44%மும், கேரளாவில் 6.90% குறைந்துள்ளன. சட்டத்தில் என்ன எழுதி வைத்திருந்தாலும் இந்து சமூகத்திலும் அதிகார வர்க்கத்திலும் ஊடுருவியிருக்கும் முஸ்லீம் விரோத உளவியல்தான் நடைமுறையில் செயல்படுகிறது.

முஸ்லீம்களை சமூகப் பொருளாதார புறக்கணிப்பு செய்து, இரண்டாம்தர குடிமக்களாக்கி அடிபணியச் செய்யவேண்டும் என்ற இந்துவெறி பாசிஸ்டுகளின் கொள்கையும், ஏழைகளுக்கு வங்கிச் சேவையை மறுக்கும் புதிய தாராளவாதக் கொள்கையும் ஊடும் பாவுமாகப் பின்னியிருக்கின்றன. மதத்துவேசம் வர்க்கத்துவேசத்திற்குள் மறைந்து கொள்கிறது. வர்க்கத்துவேசம் மதத்துவேசத்தால் புனிதப்படுத்தப்படுகிறது. வங்கிகளில் நடக்கும் இந்த அநீதியின் பொருள் இதுதான்.

0 கருத்துகள்: